குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மாவட்டத்தின் சாய்லா தாலுக்காவில் உள்ள தாடுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்து கமானி. 25 வயதான இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். தற்போது பெய்துவரும் தொடர்மழையால் இவரது எள் பயிர்கள் நாசமடைந்துவிட்டன. இதனால் மனமுடைந்த கமானி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகுதான் போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதுகுறித்து விசாரித்ததில் கமானியின் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இவரைவிட்டு பிரிந்து சென்றதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்போது தனது தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் குடும்பத்தார் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய சாய்லா காவல் நிலையத்தின் துணை அதிகாரி ஆர்.ஜி கோஹில், இந்த இரண்டு காரணங்களில் எது கமானியின் தற்கொலைக்கு காரணம் என்பதை விசாரித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தில் பிரதாப் வேகல் என்ற விவசாயியும் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு பொருளாதாரப் பிரச்னை இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாகக் குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். ஆனால் அவருடைய பயிர்கள் மழையால் நாசமடைந்ததால்தான் அவரும் இந்த விபரீத முடிவை எடுத்ததாக ஊரார் தெரிவித்திருக்கின்றனர்.
மாநிலங்களவையில் பெரும் கலவரத்தை ஏற்படுத்திய இரண்டு விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட சமயத்தில் இரண்டு விவசாயிகள் எடுத்திருக்கும் இந்த முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆதரவு தர இரண்டு டஜன் உழவர் அமைப்புகள் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.