‘ஆபாசப் படத்தை வெளியிடுவோம்’- கடன் நிறுவனங்களின் மிரட்டலால் குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தம்பதி!

போபாலில் கடன் காரணமாக ஒரு தம்பதி தங்களின் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட குடும்பம்
தற்கொலை செய்துகொண்ட குடும்பம்ட்விட்டர்
Published on

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நீல்பாத் பகுதியைச் சேர்ந்தவர் பூபேந்திர விஸ்வகர்மா. இவரது மனைவி ரிது விஸ்வகர்மா. இவர்களுக்கு ரிஷிராஜ் (9), ஹிருதுராஜ் (3) என இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கணவன் மனைவி இருவரும் கடன் தொல்லை காரணமாக, தங்கள் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, பின்னர் தாங்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில், ‘கடன் தராவிட்டால் உங்களுடைய ஆபாச படங்களை வெளியிடுவோம்’ என கடன் வழங்கிய நிறுவனங்கள் கூறியதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இம்முடிவை எடுத்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

”குடும்பத்தின் தேவையைச் சமாளிப்பதற்கு மனைவிக்கு தெரியாமல் ஆன்லைனில் முயற்சித்தேன். அப்போது மோசடிக்கு ஆளானேன். அவர்களால் நான் ஏமாற்றப்பட்டேன். அவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். ஜூன் மாதத்தில் EMI செலுத்த முயற்சி செய்த நிலையில், ஜூலையில், கடன் நிறுவனத்தினர் எனது தொலைபேசியை ஹேக் செய்து என் குடும்பத்தினரை பிளாக்மெயில் செய்யத் தொடங்கினார்கள். என் குடும்பத்தினரின் படத்தையும் தவறாகப் பயன்படுத்தினார்கள். என் தவறினால் ஒட்டுமொத்த குடும்பத்தினருமே பாதிக்கப்பட்டோம்.

இதனால் நான் யாருடனும் பேச முடியாத நிலை ஏற்பட்டது. யாரையும் சந்திக்கவும் முடியாத நிலையில் இருக்கிறேன். யாரையும் எதிர்கொள்ளும் தகுதி எனக்கு இல்லை. என் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எல்லோரும் எங்களை மன்னியுங்கள். நாங்கள் இறந்தபிறகு எல்லாம் சரியாகிவிடும். நாங்கள் இறந்த பிறகு, தயவு செய்து எங்கள் குடும்பத்தினரை கடனுக்காக தொந்தரவு செய்யாதீர்கள். எங்களது பயணம் இத்துடன் முடிவடைகிறது. பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என்பதே எங்களின் இறுதி விருப்பம். அதேநேரத்தில், அனைவரின் இறுதிச் சடங்குகளும் ஒன்றாக செய்யப்பட வேண்டும். அங்காவது நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்” என அதில் எழுதியுள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com