கடன்சுமை, பொருளாதார நெருக்கடி, CEO க்கு ’லுக் அவுட்’ நோட்டீஸ் என்று பல்வேறு பிரச்னைகளை சந்தித்துவரும் கல்வி நிறுவனமான Byju's , தற்போது வேறொரு பிரச்னையை எதிர்க்கொண்டுள்ளது. இது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமாக தனது பயணத்தினை தொடங்கியது. தொடங்கிய குறுகிய காலத்திலேயே நன்கு வளர்ச்சி அடைந்த இந்நிறுவனம் $20 பில்லியன் என்ற அளவில் சந்தையில் மதிப்பிடப்பட்டது.
மேலும் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில்தான், மாணவர்கள் இணையம் வழியாக கல்வி கற்கவேண்டும் என்ற சூழலில் உருவானது. இந்நிலையில் கொரோனா தொற்றின் காலம் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காலமாக அமைந்தது. இப்படி, ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப்களில் ஒன்றாகப் போற்றப்பட்டு வந்த இந்நிறுவனம் கொரோனா தொற்றுக்கு பிறகு இணையவழி கல்வியின் தேவை குறைந்து வருந்ததால் தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.
போதிய வருமானம் இல்லததால் பொருளாதார நெருக்கடி, இந்நிறுவனத்தின் CEO ரவீந்திரனுக்கு அயல்நாடுகளுக்கு தப்பி செல்ல இயலாத ’லுக் அவுட்’ அறிக்கை என்று பல பிரச்னை.
இந்நிலையில், சிலர் பைஜூஸ் அலுவலகம் புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியை எடுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகனின் பயிற்சி வகுப்பு ஒன்றுக்காக பணம் செலுத்திய பெற்றோர்கள், அதனை திரும்ப தரக்கோரி Byju's நிறுவனத்திடம் பல நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளனர். கொடுத்த காலக் கெடு முடிந்தநிலையில், கோபமடைந்த குடும்பத்தினர், பைஜீஸ் அலுவலகம் புகுந்து அங்கு மாட்டப்பட்டிருந்த தொலைக்காட்சியை எடுத்து சென்றுள்ளனர்.
மேலும், அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம், ‘எங்களின் பணத்தை எங்களிடம் திரும்ப செலுத்தும் போது இந்த தொலைக்காட்சியை வந்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றும் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த காணொளியானது தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு, பேசுபொருளாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.