கேரளாவில் பருவ மழையால் ஆங்காங்கே நிலச்சரிவு, வெள்ளம் என்று மக்கள் அவதிபடும் வேளையில், ஒரு குடும்பம், நிலச்சரிவிலிருந்து , காட்டு வெள்ளத்திலிருந்து, காட்டு விலங்குகளிடமிருந்து என்று படாதபாடுபட்டு... கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு மேலாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வயநாட்டில் சூரல்மலை என்ற இடத்தில் வாழ்ந்து வந்தவர் சுஜாதா. இவர் மகன் ஜிகீஷ், மருமகள் சுஜிதா, மற்றும் பேத்தி மிருதுளா பேரன் சுராஜ் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இதில், கடந்த இரு தினங்களுக்கு முன் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, இவர்களது வீட்டிற்குள் வெள்ளம் வர ஆரம்பித்து இருக்கிறது.
உடனே சுதாரித்துக்கொண்ட, ஜிகீஷ் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி வெள்ளம் அதிகரிப்பதற்குள் தண்ணீரில் நீந்தி கடக்குமாறு கூறியுள்ளார். அனைவரும் நீரில் கடந்து வெளியேறவும், கண்களுக்கு எதிரே நிலச்சரிவும் ஏற்பட்டு இருக்கிறது. அதிர்ச்சியடைந்த இவர்கள் தண்ணீரை தாண்டி ஒரு வழியாக கரையை கடந்துள்ளனர்.
இதில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள் சுராஜ் மார்பிலும் முதுகிலும் காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஜிகீஷின் தலையிலும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி இருந்தும் அத்தனை பேரும் சளைக்காமல் முயற்சி செய்து, பயத்துடன் கரையை எட்டும் நிலையில் ஒரு யானைக்கூட்டம் கரையில் நின்றுக் கொண்டிருந்திருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாத நிலையில், அனைவரும் உயிரை கையில் பிடித்தப்படி இருந்துள்ளனர். ஆனால் யானைக்கூட்டம் அவர்களை எதுவும் செய்யாமல் அங்கிருந்து கடந்து சென்றதும்தான், அனைவருக்கும் உயிர் வந்துள்ளது.
அதன்பிறகு கையில் இருந்த டார்ச் வெளிச்சத்தில் அனைவரும் காப்பிக் காட்டினை கடந்து சாலையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தபோது, காட்டெருமை கூட்டம் ஒன்று அவர்களுக்கு எதிரே வந்துள்ளது. அதைப் பார்த்ததும் அனைவரும் மீண்டும் கதிகலங்கியுள்ளனர். மறுபடி தண்ணீரில் இறங்கலாம் என்றால் முன்பைவிட வெள்ளம் அதிகளவு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்திருக்கிறது.
ஆனால் ஜிகீஷ் அனைவருக்கும் தைரியத்தைக் கொடுத்து, யாரும் எங்கும் செல்லவேண்டாம் அமைதியாக அங்கேயே அமருங்கள் என்று கூறவும், அனைவரும் அங்கேயே உயிரைக்கையில் பிடித்தப்படி காலை 5 மணி வரை அமர்ந்துள்ளனர். அதன் பின்னர், காட்டெருமை அங்கிருந்து சென்றதும் அவர்கள் சாலையை அடைந்து உயிர் பிழைத்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதில் மிருதுளாவும், சுஜாதாவும் நிவாரண முகாமில் அடைக்கலமாகி உள்ளனர். மற்றவர்கள் காயத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மனோரமா இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.