உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவின் செக்டார் 50 பகுதியில் அமைந்துள்ளது, ஸ்பெக்ட்ரம் மால். இந்த வணிக வளாகத்தில் உணவகம் ஒன்றும் உள்ளது. இந்த உணவகத்திற்கு, ஒரு குடும்பத்தினர் சாப்பிடச் சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் சாப்பிடுவதற்கு உணவு ஆர்டர் செய்துள்ளனர். அதில், அவர்கள் ஆர்டர் செய்த உணவுகளில் சிலவற்றை, அவர்களுக்கு சப்ளை செய்த உணவக ஊழியர் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. எனினும், சாப்பிட்டு முடித்தபின் அவர்கள் சாப்பிட்டதற்கான பில் வழங்கப்பட்டுள்ளது. அதில், சர்வீஸ் தொகையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் கோபமுற்ற அவர்கள், அந்தச் சேவைத் தொகையை நீக்கும்படி உணவகத்திடம் முறையிட்டுள்ளனர். மேலும், தங்களுக்குச் சிறப்பான முறையில் சர்வீஸ் செய்யப்படவில்லை எனவும் அவர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், உணவகமும், ஊழியர்களும் அதை ஏற்க மறுத்துள்ளனர். இதையடுத்து, அந்தக் குடும்பத்தினருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது இரு தரப்பினரும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதால் இரு தரப்பினரும் ஆத்திரம் அடைந்தனர். இதனால், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அந்த குடும்பத்தில் இருந்த ஆண்களுக்கும், உணவக ஊழியர்களுக்கும் இடையே வணிகவளாகத்தின் வெளியே அடிதடி ஏற்பட்டது.
இதனால், அந்த வணிக வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வணிக வளாக பாதுகாப்பு ஊழியர்களும், வணிக வளாக பொறுப்பாளர்களும் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இணையத்தில் இந்த வீடியோ வைரலாகியது. இதைத் தொடர்ந்து பலரும் அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நபர், ”உணவக ஊழியர்கள் எங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி தவறாகப் பேசினர். இதனால்தான் மோதல் வெடித்தது” எனத் தெரிவித்துள்ளார்.