குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் மக்களவையில் சுமார் 100 எம்.பிக்கள் வரை இருந்தனர். மக்களவையில் வழக்கமான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர் மாடத்தில் 30 முதல் 40 பேர் வரை அமர்ந்து அமைதியாக இருந்து பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். பூஜ்யநேரம் நடந்து கொண்டிருந்தபோது, அவர்களில் இரண்டு பேர் திடீரென அவைக்குள் எகிறி குதித்தனர்.
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவரில் ஒருவர் வண்ணங்களை உமிழும் புகைக்குப்பிகளை வீசினார். தொடர்ந்து அங்கிருந்த எம்பிக்கள் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர். இதேநேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் 2 பெண்கள் சிவப்பு வண்ண வாயுவை புகைக்குப்பியில் இருந்து வீசி முழக்கங்களை எழுப்பினர். அவர்களை பாதுகாவலர்கள் கைது செய்தனர். அப்போது அவர்களில் ஒரு பெண், 42 வயதாகியும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், சர்வாதிகாரம் ஒழிக என்றும் முழக்கமிட்டபடி சென்றார்.
இந்த விவகாரம் நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட இரண்டு பேருக்கும் மைசூரு பாரதிய ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா நுழைவு அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளார். மக்களவையில் அத்துமீறிய இருவர் மனோரஞ்சன், சாகர்ஷர்மா என்பதும் அவர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பார்க்க வேண்டும் என்று கூறி நுழைவு அனுமதிச்சீட்டு பெற்றுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதை தாண்டி நாடாளுமன்ற வளாகத்திற்குள் எதிர்ப்பை தெரிவித்த நீலம் (42) என்ற பெண்மணியும், அன்மோல் ஷிண்டே என்பவரும் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் தவிர மேலும் 2 பேருக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் வெளியே பிடிபட்ட நீலம் மற்றும் அமோல் ஷிண்டே இருவர் குறித்து டெல்லி காவல்துறையினர் தெரிவித்ததாவது, “இருவரும் மொபைல் போன்களை எடுத்துச் செல்லவில்லை. அவர்கள் எந்த பைகளையோ அல்லது அடையாள அட்டைகளையோ எடுத்துச் செல்லவில்லை. தாங்களாகவே நாடாளுமன்றத்திற்கு வந்ததாகவும் வேறு எந்த அமைப்புடனும் தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பாளர்களில் ஒருவரான மனோரஞ்சன் (35) பொறியியல் பட்டம் பெற்றவர் என்பதும் அவர் மைசூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்ற அவர் பெங்களூருவில் உள்ள விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் படித்தவர். மனோரஞ்சன் கைதான பின் அவரது வீட்டில் சோதனையிட்ட காவல்துறையினர் 35 புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளனர். தந்தை தேவராஜே கவுடா கூறியதாவது, “எனது மகன் பெங்களூர் செல்வதாகச் சொன்னான். அவன் டெல்லி மற்றும் பெங்களூர் செல்வது சகஜமானது. என்னுடன் பண்ணையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான். மைசூரில் சில காலம் தங்கி இருந்தார். நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வதும் புத்தகங்களைப் படிப்பதும் வழக்கம். வேறு கெட்டப்பழக்கங்கள் ஏதும் கிடையாது.
அவர் நாடாளுமன்றம் செல்வது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நாங்கள் விவசாயக்குடும்பம். நான் பண்ணையில் வேலை செய்துவிட்டுத்தான் வந்தேன். என் பண்ணை ஹாசனில் உள்ளது. நாங்கள் பிரதாப் சிம்ஹாவின் வாக்காளர்கள். எனது மகன் ஏதாவது நல்லது செய்திருந்தால் நிச்சயமாக நான் அதை ஆதரிப்பேன். ஆனால் ஏதும் தவறு செய்திருந்தால் கண்டிக்கிறேன்.
ஆனால் அவர் மீது எனக்கு சந்தேகம் இல்லை. எந்த ஒரு மகனும் இதுபோன்ற செயலை செய்யக்கூடாது. மக்களவை நமது சொத்து. யார் செய்தாலும் இது கண்டிக்கத்தக்கது. ஒரு தந்தையாக நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சமுதாயத்திற்கு ஏதாவது தவறு செய்திருந்தால் தூக்கிலிடட்டும்” என்றவர், “என் மகன் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன். இத்தகைய சிறந்த பிரதமரைப் பெற்றது இந்தியாவின் பாக்கியம் என்று என் மகன் கூறுவதுண்டு” எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்த எதிர்ப்பாளர்களில் ஒருவரான நீலம், ஹரியானாவில் உள்ள ஜிண்டி அருகே காசா காசோ கிராமத்தில் வசிப்பபர். உச்சானாவில் அவரது தந்தை இனிப்புக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். 42 வயதான இவர் இடதுசாரி சித்தாந்தத்தை கடைபிடிப்பவர் என்றும் விவசாயிகள் இயக்கத்திலும் சமூகப்பணிகளிலும் ஈடுபடுபவர் என ஏபிபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது தம்பி ANI செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், “அவர் படிப்பிற்காக ஹிசாரில் இருந்தார் என்பது மட்டும் தான் எங்களுக்கு தெரியும். அவர் டெல்லி சென்றார் என்பது எங்களுக்கு தெரியாது. நேற்று முன் தினம் எங்களை சந்திக்க வந்துவிட்டு நேற்று திரும்பி சென்றுவிட்டார். அவர் பெற்ற பட்டங்கள் BA, MA, B.Ed, M.Ed, CTET, M.Phil,மற்றும் NET.பலமுறை வேலையில்லா பிரச்சனைகளை எழுப்பியுள்ளார். விவசாயிகளின் போராட்டங்களின் கலந்துகொண்டார்” என தெரிவித்துள்ளார்.
நீலம் தாயார் இது குறித்து கூறுகையில், “வேலையில்லா நிலையினைப் பற்றி அவர் கவலைகொண்டிருந்தார். நான் அவளிடம் பேசினேன். ஆனால் டெல்லி செல்வதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. அதிகம் படித்திருந்தும் வேலையில்லாமல் இருக்கிறதென்றும், இதைவிட சாவதே மேல் என அடிக்கடி சொல்வாள்” என தெரிவித்துள்ளார்.
"என் மகன் 2014ல் பொறியியல் படிப்பை முடித்தார். அடிக்கடி டெல்லி, மகாராஷ்டிரா சென்று வந்தார். ஏழை மக்களுக்கு உதவும் மனநிலை கொண்டவர். என்னுடைய மகனின் படிப்பிற்காக 15 வருடத்திற்கு முன்னாள் நாங்கள் எங்களுடைய ஹசன் மாவட்டம் அர்கல்குட் தாலுக்காவில் இருந்து மைசூருக்கு இடம்பெயர்ந்து வந்தோம். தேவ கௌடாவின் உதவியினால் அதான் அவருக்கு பொறியியல் படிப்பிற்கான இடம் கிடைத்தது. தொடக்கத்தில் அடிக்கடி பெங்களூரு சென்று வந்து கொண்டிருந்தார்.
விவேகனந்தரின் புத்தகங்களை படிப்பதையே லட்சியமாக கொண்டிருந்தார். 10 ஆயிரம் புத்தகங்கள் வரை சேமித்து வைத்திருந்தார். உள்ளாடைகள் கூட வாங்காமல் புத்தகங்களாக வாங்கிக் குவித்தவர். புத்தகங்களை அதிகப்படியாக படித்ததால் இந்த செயல்களுக்கு வந்துசேர்ந்துவிட்டாரா என்பது தெரியவில்லை.
இதற்கு முன்பு அவர் எந்தவித சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. நம்முடைய பிரதமர் ஒரு கடவுள். என்னுடைய மகன் பிரதமரின் பெரிய ரசிகராக இருந்தார். இப்படியொரு பிரதமர் நமக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்று அடிக்கடி கூறுவார்” என்றார் அவர்.