போலி கால் சென்டர் நடத்தி பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடித்ததாக 3 பேரை சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். போலி கால் சென்டர்கள் மூலம் 2020 ஆண்டு மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளது.
உங்களுக்கு லோன் வேண்டுமா சார்… நம்மில் பலருக்கு மாதத்திற்கு இப்படி ஓர் அழைப்பாவது கண்டிப்பாக வந்திருக்கும். உண்மையாகவே கடன் வழங்கும் நிறுவனங்கள் இருக்கும் நிலையில், பல போலிகளும் உலா வரத்தான் செய்கின்றன. பொதுமக்களின் தேவை மற்றும் வறுமையை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் இக்கும்பல் அவர்களின் ஆவணங்களைப் பெற்று, பல கோடி ரூபாய்க்கு மோசடியில் ஈடுபட்டுள்ளன.
போலி கால் சென்டர் மூலம் பொதுமக்களை குறிவைக்கும் கும்பல் குறித்து தொடர் புகார் வந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப்பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய தனிப்படையினர் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் போலி கால் சென்டர் நடத்தி வந்த சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன், சைதாப்பேட்டையைச் சேர்ந்த கோபிநாத், விழுப்புரத்தைச் சேர்ந்த மணிபாலா ஆகியோரை சுற்றி வளைத்தனர்.
இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்தால் தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறி பொதுமக்களை இக்கும்பல் நம்ப வைத்துள்ளது. மேலும், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முன்பணத்தை செலுத்த வேண்டும் என் கூறி, பணத்தை பெற்றுக் கொண்டு கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதில், கைதான தியாகராஜன் இதற்கு முன்பு சென்னை அண்ணாசாலை, ராயலா டவர்சில் மிகப்பெரிய அளவில் போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டு கைதான பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் நெருங்கிய கூட்டாளியாவார். கொரோனா காலத்தில் பொதுமக்களின் நிதிநெருக்கடியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட கும்பல் தற்போது சிறையில் உள்ளது.
2020ம் ஆண்டில் மட்டும் இதுவரை போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் 365 புகார்கள் பெறப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த White Collar கொள்ளையர்கள் பொதுமக்களிடமிருந்து ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை அபகரித்துள்ளனர்.
இந்த நவீன உலகில் திருடர்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. பொதுமக்கள்தான் திருடர்களுக்கு இடம் கொடுக்காமல், உஷாராக இருக்க வேண்டும்.