பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டனர் அபிநந்தன் பெயரில் ஏராளமான போலி பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
தேசமே கொண்டாடும் ஹீரோவாகிவிட்டார் இந்திய விமானப்படை விங் கமாண்டனர் அபிநந்தன். சிறைபிடிக்கப்பட்டிருந்த போதும் கூட, முகத்தில் சிறிய பயம் இல்லாமல் பாகிஸ்தான் ராணுவத்திடம் அபிநந்தன் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்தது. இந்தியா திரும்பிய அவரை நாடே வரவேற்றது. இந்நிலையில் அபிநந்தன் பெயரில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
ட்விட்டரில் @Abhinandan_wc, @IAFAbinandhan உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் விங் கமாண்டர் அபிநந்தனின் ட்விட்டர் பக்கம் என போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல பேஸ்புக்கிலும் அபிநந்தன் பெயரில் போலி கணக்குகள் உள்ளன. அபிநந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அபிநந்தன் அமர்ந்து பேசியது உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் போலி பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பல பதிவுகள் அவற்றில் பதிவிடப்பட்டுள்ளன. இவை போலியான ட்விட்டர் கணக்கு என மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.