மத்திய அரசின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் குறித்து பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.
பாஜக அரசு பொறுப்பேற்றவுடன், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டே இவரின் பதவி முடிந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆண்டு பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே ஜூன் மாதம் பதவி விலகினார். இந்நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் குறித்து பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர். சென்னையில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஐஐடி கான்பூரில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பிடெக் பட்டமும், கொல்கத்தா ஐஐஎம்-இல் எம்பிஏ பட்டமும் பெற்றவர். அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் முனைவர் பட்டம் பெற்றவர். மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனின் மாணவரான இவர், 2015ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வில் பங்கேற்றிருந்தார்.
கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்தான் இந்தியாவில் மிகச் சிறிய வயதில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் முதல் நபர். நிதித் துறை, பெருநிறுவன ஆளுகை மற்றும் பொருளாதார கொள்கைகள் வகுப்பதில் சிறந்த அனுபவம் கொண்ட இவர், அத்துறைகள் சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பல்வேறு சர்வதேசப் பத்திரிகைகளில் இவரது ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள ஜேபி மோர்கன் நிறுவனத்தில் கன்சல்டண்டாகவும், ஐசிஐசிஐ ஆராய்ச்சி குழுமத்தில் பகுதி நேர ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது இந்தியாவின் முன்னணி வணிகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹைதராபாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி பதவியில் நீடிக்கவுள்ளார்.