Viral Video FACT CHECK | இந்துப் பெண்களை புர்கா அணியுமாறு கட்டாயப்படுத்தினரா இஸ்லாமிய மாணவிகள்?

புர்கா அணிந்த சில பெண்கள், அது அணியாத ஒரு இந்துப் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அந்த இந்துப் பெண்ணை புர்கா அணியுமாறு அவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டு, ஒரு வீடியோ இணையத்தில் பரவிவருகிறது. இது போலி செய்தி. உண்மை என்னவென்பதை, இங்கே காணலாம்.
கேரளா
கேரளாpt web
Published on

உண்மையில் நடந்தது இதுதான்!

கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் செயல்படும் கான்ஸா பெண்கள் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சிலர் தங்கள் கல்லூரி வாசலில் பேருந்து நிறுத்தம் இருக்கின்றபோதும்கூட அங்கு பேருந்துகள் நிற்பதில்லை என்றும், 500 மீட்டர் தள்ளிதான் பேருந்துகள் நிற்கின்றன என்றும் புகார் எழுப்பி வந்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி மாணவிகள் பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எப்படி திரிக்கப்பட்டது வீடியோ?

இதில் மாணவிகளுக்கும் பேருந்தில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. மாணவிகள் அனைவரும் புர்கா அணிந்திருந்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மதம் தொடர்பான கருத்துகளுடன் ஒப்பிடப்பட்டு பதிவிடப்பட்டு வருகிறது.

‘வைரலாக்கப்பட்ட’ அந்த வீடியோக்களின் கேப்ஷன்களில் “புர்கா அணிந்த பெண்கள் சேலை அணிந்திருந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்துப் பெண்ணை புர்கா அணியுமாறு கூறினர்” என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டிருந்தன.

ஆதாரங்கள்:

1) வீடியோவில் கேட்கும் குரல்கள் சொல்வதென்ன?

இந்நிலையில் இது தொடர்பாக ALT செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், “புர்கா அணிந்த பெண்கள், அது அணியாத பெண்ணை புர்கா அணியுமாறு வற்புறுத்தியதாக வீடியோவில் எங்கும் காணப்படவில்லை.

இது தொடர்பான வேறொரு வீடியோ க்ளிப் ஒன்றில், பெண்கள் பேருந்தை மறித்து நிறுத்துவதையும், ‘பேருந்து நிறுத்தத்தில் ஏன் பேருந்தை நிறுத்த மாட்டேன் என்கிறீர்கள்? பேருந்தை நிற்கவில்லை என்றால் அங்கு பேருந்து நிறுத்தம் எதற்கு உள்ளது? சொல்லுங்கள்’ என ஓட்டுநரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்புகின்றனர்.

இப்படியாக மாணவிகளின் போராட்டம் தொடர்ந்த நிலையில், பேருந்தினுள் இருந்த சேலை அணிந்திருந்த பெண்ணொருவர் (இந்துப் பெண்) அப்போராட்டத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார். இந்நிலையில் மாணவிகள் ‘எங்களது கஷ்டத்தை அவர் புரிந்துகொள்ள தவறி விட்டார்’ என தெரிவிக்கின்றனர்” என தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு மதரீதியான எவ்வித அத்துமீறல்களும் நிகழவில்லையென அது உறுதிசெய்துள்ளது.

2) சம்பந்தப்பட்ட மாணவிகளின் கல்லூரி நிர்வாகம் சொல்வதென்ன?

இந்நிலையில் மருநாடன் என்ற டிவி இச்சம்பவம் குறித்து மாணவிகள் பயிலும் கல்லூரி முதல்வரிடமே தகவல் கேட்டுள்ளது. அவர் ஊடகங்களில் பேசுகையில் “கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகள் கல்லூரி முன் உள்ள புதிய பேருந்து நிறுத்தம் முன் நிற்பதில்லை. இதனால் மாணவிகள் அரை கிலோமீட்டர் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது. இது குறித்து பேருந்து ஓட்டுநர்களை மாணவிகள் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனாலும் ஊழியர்கள் அதற்கு இறங்கிவரவில்லை.

குறிப்பிட்ட சம்பவம் நடந்த அந்த நாளில், புதிய பேருந்து நிறுத்தத்தில் மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இரண்டு மூன்று பேருந்துகள் நிற்காமல் சென்றுவிட்டது. இதனை அடுத்துதான் அம்மாணவிகள் பேருந்தை மறித்தனர். காவல்துறை, உள்ளூர் எம்எல்ஏ மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் இவ்விஷயங்கள் அனைத்தும் தெரியும்” என தெரிவித்துள்ளார்.

3) சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனமும் விளக்கம்!

இவ்வளவு சர்ச்சைகளுக்கும் உள்ளான சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனமான ஸ்ரீ குருவாயூரப்பன் பேருந்து சேவையையும் ALT செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அப்போது பேசிய அவர்கள், “இது வகுப்புவாத பிரச்சனை அல்ல. கல்லூரி முன் இருக்கும் புதிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்க வேண்டும் என்பது நீண்ட கால பிரச்னையாக இருக்கிறது. அதற்காக நடந்த சம்பவமே இது” என தெரிவித்துள்ளனர்.

ஆக, ‘இணைய தளங்களில் மதரீதியாக பரவும் கருத்துகள் தவறானது. பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் போனதால் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே போராட்டம் நடந்துள்ளது. அது தொடர்பாகவே பேருந்தில் வாக்குவாதங்கள் எழுந்துள்ளன’ என்பது தெளிவாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com