நடிகை கங்கனா ரணாவத், இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், கங்கணா ரணாவத் பற்றி மூத்த நடிகர் நசீருதீன் ஷா கூறியதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து உண்மைச் சரிபார்க்கப்பட்டது.
”கங்கனா ரணாவத்துக்கு நரேந்திர மோடியைத் தவிர, மற்ற எல்லா நடிகர்களிடமும் பிரச்னைகள் இருக்கின்றன” என மூத்த நடிகரான நசீருதீன் ஷா பதிவிட்டிருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி வைரலாகியது. அதாவது, பிரதமர் மோடியும் ஒரு நடிகர் என்பது போல் அந்தப் பதிவு விமர்சனத்தை முன் வைத்திருந்தது.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்று உண்மைச் சரிபார்ப்பு நடத்தியுள்ளது. அதில், அந்தப் பதிவு தவறானது என்றும், அந்த எக்ஸ் தள முகவரியே போலியானது எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவருடைய (நசீருதீன் ஷா) பெயரைப் பயன்படுத்தி போலி எக்ஸ் தள கணக்கு மூலம் இதுபோன்று பதிவு வெளியிடப்பட்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம், நடிகர் நசீருதீன் ஷாவுக்கு எக்ஸ் தளக் கணக்கு இல்லை என்பதும், அவர் மேற்கண்ட பதிவை வெளியிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஆக, இந்தப் பதிவு முழுக்கமுழுக்க முற்றிலும் போலி என நிரூபிக்கப்பட்டுள்ளது.