பணிச்சுமையால் உயிரிழந்த இளம்பெண்.. நிறுவனத்தை ஆய்வு நடத்திய மத்திய அரசு.. வெளிவந்த புது தகவல்!

புனேயில் அதிக பணிச்சுமை காரணமாக உயிரிழந்த விவகாரத்தில், அந்த நிறுவனத்தில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் மகாராஷ்டிர தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர் ஆய்வு செய்ததில் புதிய தகவல் வெளிவந்துள்ளது.
அன்னா செபாஸ்டியன் பேராயில்
அன்னா செபாஸ்டியன் பேராயில்எக்ஸ் தளம்
Published on

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர், அன்னா செபாஸ்டியன் பேராயில். 26 வயது இளம்பெண்ணான இவர், பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்-கில் (EY) பட்டயக் கணக்காளராக, கடந்த மார்ச் 19ஆம் தேதி பணிக்குச் சேர்ந்தார். அடுத்த நான்கு மாதத்தில், அதாவது கடந்த ஜூலை 20ஆம் தேதி பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன், கட்டிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அன்னா உயிரிழந்து 2 மாதங்களாகும் நிலையில், அவர் பணிபுரிந்த பன்னாட்டு நிறுவனத்துக்கு அன்னாவின் தாயார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், அந்த நிறுவனத்தின் அதிக பணிச் சுமையாலே தன் மகள் உயிரிழந்ததாகவும், அவருடைய இறுதிச்சடங்குக்குக்கூட நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

Death
DeathFile Photo

இந்தக் கடிதம் இணையத்தில் எதிர்வினையாற்றியது. இதுதொடர்பாக பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர். இதையடுத்து எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அந்த தாயாரின் கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறியிருந்தது. அதற்குப் பிறகு எர்னஸ்ட் அண்ட் யங் (EY) இந்திய தலைவர் ராஜீவ் மேமானி எழுதிய பதிலில், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் நிறுவன ஊழியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதாகவும், அவர்களின் அக்கறையில் பங்கெடுக்க உறுதிகொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் மத்திய அரசும் தலையிட்டு, விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: திருப்பதி லட்டு விவகாரம்| பவன் கல்யாண் - நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே முற்றும் கருத்து மோதல்!

அன்னா செபாஸ்டியன் பேராயில்
”மூச்சுவிடக் கூட..”|அதிக பணிச்சுமையால் இளம்பெண் மரணம்.. புனே நிறுவனத்திற்கு தாயார் உருக்கமான கடிதம்!

இதுதொடர்பாக மத்திய அரசின் உத்தரவின் பேரில் மகாராஷ்டிர தொழிலாளர் துறை அதிகாரி ஒருவர் நேற்று புனேவில் உள்ள எர்ன்ஸ்ட் அண்ட் யங் (இஒய்) அலுவலகத்தில் ஆய்வு செய்தார். இதுகுறித்து கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஷைலேந்திரா போல், ”மத்திய அரசின் உத்தரவுப்படி, புனே அலுவலகத்தின் பணி நிலைமைகள் மற்றும் உண்மை நிலையை மதிப்பிடுவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. அலுவலகச் செயல்பாடுகள், பணியாளர் நலன் மற்றும் ஊழியர்களுக்கான இழப்பீடு உட்பட கூடுதல் வேலை நேரத்தைக் கையாள்வது தொடர்பான நிறுவனத்தின் கொள்கைகள் பற்றிய விவரங்களை நாங்கள் கேட்டிருக்கிறோம். நிறுவனம் ஏழு நாட்களுக்குள் இந்தத் தகவலை வழங்கவேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்டவரின் நியமனக் கடிதம், அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். நியமனக் கடிதத்தில் இருந்து, அவர் (அவரது பணி விவரம்) 'தொழிலாளர்' என்ற சட்ட வரையறையின்கீழ் வரவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், செபாஸ்டியன் ஒரு ஊழியராக இருந்ததால், இந்த விஷயத்தை ஊழியர் நலன் மற்றும் நல்வாழ்வின் கண்ணோட்டத்தில் கவனிக்க வேண்டும். நிறுவனம் கோரிய விவரங்களை அளித்தவுடன், மத்திய அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்படும், பின்னர் அவர்கள் அடுத்த நடவடிக்கை எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு இணங்காத நிறுவனம் ஒன்று, ஒரு தொழிலாளிக்கு விபத்து காரணமாக உடலில் காயமோ அல்லது மரணத்தை ஏற்படுத்தினாலோ, அதற்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.5,00,000 வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள்! அரசியலில் கிளம்பிய புயலையடுத்து ’திருப்பதி லட்டு’ அமோக விற்பனை!

அன்னா செபாஸ்டியன் பேராயில்
புனே|அதிக பணிச்சுமையால் இளம்பெண் மரணம்.. வைரலான தாயின் உருக்கமான கடிதம்! நிறுவன தலைவர் கொடுத்த பதில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com