பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதே என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெட்ரோல் விலை முதன்முறையாக ஒரு லிட்டர் 82 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் உயர்ந்து 75 ரூபாய் 19 காசுகளாக விற்கப்படுகிறது.
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 81 ரூபாய் 92 காசுக்கு விற்ற நிலையில், இன்று 32 காசுகள் உயர்ந்து 82 ரூபாய் 24 காசுகளாக விலை அதிகரித்துள்ளது. அதேபோல் 74 ரூபாய் 77 காசுகளாக விற்கப்பட்ட டீசல் இன்று 42 காசுகள் அதிகரித்து 75 ரூபாய் 19 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதே பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 98 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 3 ரூபாய் 57 காசுகளும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதே என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், வெளிநாட்டு பிரச்னைகள் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக விளக்கினார். ஓபெக் எனப்படும் எண்ணெய் வள நாடுகள் உறுதியளித்தபடி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்றும் வெனிசுலா மற்றும் ஈரானில் நிலவும் பிரச்னைகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும் தெரிவித்தார். எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுத்து அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்