இந்தியாவில் கடந்த நிதியாண்டைவிட, இந்த நிதியாண்டில் இந்தியாவின் மின் நுகர்வு அதிகரித்திருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டைவிட அதிகரித்த மின் நுகர்வு..
இந்த நிதியாண்டில் ஏப்ரல் - பிப்ரவரி காலத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 10 சதவீதம் அதிகரித்து 1375.57 பில்லியன் யூனிட்டுகளாக (BU) உயர்ந்துள்ளது. கடந்த 2021-22ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவைவிட, இந்த ஆண்டு மின் நுகர்வு அதிகரித்திருப்பதாகவும் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 2021 - 22ஆம் ஆண்டு ஏப்ரல் - பிப்ரவரி மாத மின் நுகர்வு 1245.54 பில்லியன் யூனிட்கள் என அது தெரிவித்துள்ளது.
மின் நுகர்வு அதிகரிப்புக்கு காரணம் என்ன? - நிபுணர்கள் கருத்து
2021 - 22ஆம் நிதியாண்டில், மின் நுகர்வு 1374.02 பில்லியன் யூனிட்களாக இருந்தது. இது ஏப்ரல் 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 1375.57 பில்லியன் யூனிட் மின் நுகர்வைவிடக் குறைவாகும். குறிப்பாக, ”கோடையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, அதாவது வரும் மாதங்களில் அதிக தேவை ஏற்படும் என்ற கணிப்புகளின் காரணமாக, மின் நுகர்வு இரட்டை இலக்கத்தில் இருக்கும்” என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்வெட்டு வேண்டும் - மாநில அரசுகளுக்கு கோரிக்கை
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் உச்சபட்ச மின் தேவை 229 ஜிகாவாட்டாக இருக்கும் என மின்துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு, இதே மாதத்தில் பதிவான 215.88 ஜிகாவாட்டைவிட அதிகமாகும். இதையடுத்து, அதிக மின் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், மின்வெட்டு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய அமைச்சகம் கொடுத்த அறிவுறுத்தல்
இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களும் மார்ச் 16 முதல் ஜூன் 15 வரை முழு திறனும் இயங்குபடியும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தவிர, உள்நாட்டு உலர் எரிபொருளுடன் கலப்பதற்கு நிலக்கரியை இறக்குமதி செய்யும்படி மற்ற அனல் மின் உற்பத்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
“கோடையில் வெப்பம் அதிகமாக இருப்பதால், குளிரூட்டிகள் மற்றும் பிற குளிரூட்டும் சாதனங்களை இயக்குவதற்கு அதிக மின் நுகர்வு ஏற்படுவதோடு, ஏப்ரல் முதல் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அதிக மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது சவாலாக இருக்கும்” மின் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.