'காக்கும்' கழிவுகள், 1200 பனிப்பாறைகள்...- உத்தராகண்ட் பேரழிவும், உலுக்கும் உண்மைகளும்!

'காக்கும்' கழிவுகள், 1200 பனிப்பாறைகள்...- உத்தராகண்ட் பேரழிவும், உலுக்கும் உண்மைகளும்!
'காக்கும்' கழிவுகள், 1200 பனிப்பாறைகள்...- உத்தராகண்ட் பேரழிவும், உலுக்கும் உண்மைகளும்!
Published on

உத்தராகண்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமும் பின்னணியும் குறித்து விளக்குகிறார் பனிப்பாறை நிபுணர் தோபல்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்திலுள்ள நந்தா தேவி பனிப்பாறைகளில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகிலுருந்த கிராமங்கள், நீர்மின் நிலையம் மற்றும் பல உயிர்களை வாரிக்கொண்டு போனது. இதில் காணாமல்போன பலரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் பனிப்பாறைகள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்று உத்தராகண்ட். இமயமலையைத் தொடர்ந்து இந்தியாவிலேயே மிக உயரமான மலைகளும் இங்குதான் இருக்கிறது. பனிப்பாறை உருகி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது என்பது உண்மையில் பனிப்பாறை ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுதான்.

அது என்ன பனிப்பாறை ஏரி?

பொதுவாக பனிப்பாறைகள் உள்ள இடங்களில் அவை முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் உருகும் பனிப்பாறைகள் மலை இடுக்கில் தேங்கியிருக்கும். இது நிரம்பும்போது ஆறாக வழிந்தோடும். அந்த ஆற்றுநீரை ஆதாரமாக வைத்து பல தொழில்களும், மக்களும் இயங்கிவருவர்.

உத்தராகண்டில் ஏற்பட்ட பனிப்பாறை வெள்ளப்பெருக்கை பனிப்பாறை ஏரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு என்று சொல்லலாம். பனிப்பாறைகள் மெதுவாக உருகுவதற்கு பதிலாக அதிக வெப்பத்தால் திடீரென அதிக அளவில் சரிந்து ஏற்கெனவே நிரம்பி ஆறாக வழிந்துகொண்டிருக்கும் ஏரிக்கும் விழும்போது, ஏரியில் அதிகப்படியான அழுத்தம் உருவாகும். இந்த அழுத்தத்தால் பனிக்கட்டிகள் நிரம்பிய நீர் அதிவேகத்தில் பாய்ந்தோடும். கடுமையான சீற்றத்துடன் வரும் வெள்ளம் ஆற்றின் கரையோரங்களில் உள்ளவற்றையும் வாரிக்கொண்டு சென்றுவிடும். இதை புவியியல் கூற்றுப்படி, ஆங்கிலத்தில் GLOF - Glacial Lake Outburst Flooding என்று சொல்கிறார்கள்.

பனிச்சரிவு ஏற்பட காரணம் - புவி வெப்பமயமாதல்

எங்கு பார்த்தாலும் நகரமயமாதல் மற்றும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற வளர்ச்சிப் பணிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த திட்டங்களுக்கு காடு, மலை, வயல், நீர் ஆதாரங்கள் என அனைத்தும் பலியாகின்றன. அதன் விளைவு இயற்கை முற்றிலும் அழிக்கப்பட்டு எங்கும் செயற்கைமயமாதல். இதுவே புவி வெப்பமயமாதலுக்கு காரணம் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.

உத்தராகண்ட் பனிச்சரிவு வெள்ளப்பெருக்கு குறித்து விளக்குகிறார் ஹிமாலயன் புவியியல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பனிப்பாறை நிபுணர் டி.பி.தோபல். இவர் இமயமலை பனிப்பாறைகளில் அதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து அதீத பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. பின்பு திடீரென பனிப்பொழிவு நின்று சற்று வெப்பமாகி இருக்கிறது. இந்த திடீர் மாற்றம் பனிச்சரிவுக்கு காரணமாகி, அதுவே கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக சாதாரண இடங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு பிறகு வெப்பமாகும்போது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. அதுவே பனிப்பிரதேசங்களில் அதீத பனிப்பொழிவுக்கு பிறகு திடீரென வெப்பமாகும்போது, புதிதாக பொழிந்த பனியானது உருக ஆரம்பிக்கும். அதேசமயத்தில் பெரும்பாலான பனிப்பாறைகளில் அதிகப்படியான கழிவுகள் சேர்ந்திருக்கும். பனியானது உருகி வழிந்தோடும்போது அதனுடன் கழிவுகளையும் சேர்த்து இழுத்துச்செல்லும். கழிவுகளுடன் செல்லும் பனியானது மிகவும் வலிமையானதாக மாறுவதால் அது செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் அழித்து நாசமாக்கிவிடுகிறது என்கிறார் தோபல். இதுபற்றிய தெளிவான விவரங்களை ஆராய ஒரு குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இந்த நிலை தொடர்ந்தால் என்னவாகும்?

உத்தராகண்டில் இதுபோன்று ஆயிரக்கணக்கான பனிப்பாறைகள் இருக்கின்றன. இவற்றில் கழிவுகளும் அதிக அளவில் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் பனிப்பாறைகள் உருகும்போது அதிலுள்ள கழிவுகள் ஏரியின் அடியில் சென்று தங்கிவிடுவதால் அதிலிருந்து சுத்தமான நீர் மட்டும் ஆறாக வழிந்து ஓடும். சமீபத்திய ஆண்டுகளில் உத்தராகண்டில் இந்த பனிப்பாறை ஏரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. ஆனாலும் இங்குள்ள பாறைகள் செங்குத்தாக இருப்பதால் நீர் எளிதாக வழிந்தோடுகிறது. எனவே இங்கு சிக்கிம் மாநிலத்திலுள்ள பனிப்பாறை ஏரிகளைவிட சற்று குறைவாகவே இருக்கிறது எனலாம்.

ஆனால் உத்தராகண்ட் மலைப்பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட 1200 பனிப்பாறை ஏரிகளும் அளவில் பெரிதாகிக்கொண்டே வருகின்றன. தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைப் போன்றே மீண்டும் வெள்ளப்பெருக்கு வருவதற்கான வாய்ப்புகள் இங்கு நிறையவே இருக்கின்றன. அதேசமயம் ஏரிகளில் இருந்து வழிந்தோடும் வெள்ளத்தை சேமித்து வைப்பதற்கான அணைகளும், நீர்த்தேக்கங்களும் அங்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பனிச்சரிவு பற்றிய விவரங்கள் ஏன் இன்னும் தெளிவாக கிடைக்கவில்லை?

பனிப்பிரேதங்களில் பனிப்பாறைகள் மற்றும் மலைகள், பாறைகள் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. பனிப்பாறை நிபுணர்களும் அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு விவரங்களை திரட்டுகிறார்கள். ஆனால் அனைத்து விவரங்களையும் ஒன்றாக்கி ஒரு குறிப்பிட்ட தீர்வை அல்லது அடுத்தக்கட்ட திட்டத்தை வகுப்பதற்கான செயல்கள் நடைபெறவில்லை என்றே சொல்லவேண்டும் என்கிறார் தோபல்.

உத்தராகண்ட் மலைப்பகுதிகளில் பனிப்பாறை வல்லுநர்கள், புவியியலாளர்கள், நீர்நிலை வல்லுநர்கள், கணித ஆராய்ச்சியாளர்கள், தொலைநிலை உணர்திறன் மக்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் பலரும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பல ஆராய்ச்சி நிறுவனங்களும் இதில் ஈடுபட்டுள்ளது. ஆனால் ஒரு தெளிவான முடிவு இதுவரை கிடைக்கவில்லை. எனவே, அரசாங்கம் இதற்கென ஒரு குழுவை நியமித்து ஆராய்ச்சிகளில் ஈடுபடும் அனைவரின் முடிவையும் ஒன்றுதிரட்டி பொதுவாக தகவலை வெளியிட வேண்டும் என்கிறார் தோபல்.

- தகவல் உறுதுணை: The Indian Express 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com