சமூக வலைதளங்களின் புரட்சி, இன்றைய தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. அதில் தங்களது அனுபவங்களைப் பதிவுகளாகப் பகிர்ந்துவருகின்றனர். இதையடுத்து, சில நிறுவனங்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது. அந்த வகையில் நபர் ஒருவர், நிறுவனமொன்றில் பணியாற்றியதன் அடிப்படையில் பணி அனுபவ சான்றிதழைக் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனமோ, பாதிக்கப்பட்ட நபரிடம் மூன்று மாத சம்பளம் கேட்டுள்ளது. இதுகுறித்த தனது அனுபவ பதிவை வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.
Reddit என்ற தளத்தில், Randy31599 என்ற முகவரி கொண்ட பயனர் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ’நிறுவனம் ஒன்றில் ப்ராஜெக்ட் மேனேஜராக, 8 மாதங்களுக்கு மேலாக பணிபுரிந்ததாகவும், இடையில் சம்பள உயர்வு கிடைத்தபோதும் வேலை அழுத்தம் அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருடைய உடலில் கொழுப்பு கல்லீரல் கண்டறியப்பட்டதாகவும், அதன் விளைவாக, அவருக்கு சிக்கன் பாக்ஸ் வந்தாகவும், இதற்காக 3 நாட்கள் நிறுவனத்திடம் விடுமுறை கோரியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அவருக்கு விடுப்பு அளிக்காமல், அவரை வீட்டிலிருந்து பணி செய்யக் கட்டாயப்படுத்தியதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர், உடல்நிலை காரணமாக தனது பணியை ராஜினாமா செய்ததாகவும், அத்துடன் தன் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தம்மை வேலையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கும்படி கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதை ஏற்காத நிறுவனம், அவர் நோய்வாய்ப்பட்டபோதிலும் தொடர்ந்து பணியாற்றுமாறு வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, நிறுவனம் தாம் ராஜினாமா செய்த மறுநாளே முறையற்ற நிலையில் வேலையிலிருந்து நீக்கியதாகவும், அப்போது பணி அனுபவ சான்றிதழ் குறித்த கேட்டபோது, அதற்கு நிறுவனம் மூன்று மாதச் சம்பளத்தைத் தருமாறு தன்னிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பயனர்கள் பலரும் இதற்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.