நாளை தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? 

நாளை தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? 
நாளை தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்? 
Published on

மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இதனையடுத்து புதிய அரசின் முதல் பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு முன்பு இன்று 2018-19ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய மாநில அரசுகளின் மொத்த நிதி பற்றாக்குறை 5.8% குறைந்துள்ளது என்றும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நாளை தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்க வேண்டியவை குறித்து கொஞ்சம் ஆராய்வோம்.

பொருளாதார வளர்ச்சி:

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலண்டில் 5.8%ஆக குறைந்திருந்தது. அதேபோல வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7%ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது. எனவே இந்த நிலையை அடைய மத்திய பட்ஜெட்டில் கிராமபுற வளர்ச்சி மற்றும் சிறு, குறு தொழில்துறை நிறுவனங்களில் வளர்ச்சியை ஏற்படுத்த முற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நிதி பற்றாக்குறை:

இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 3.4% சதவிகிதமாக இருந்தது. அத்துடன் கடந்த நிதியாண்டில் வருமானவரி வசூலிப்பதற்கு நிர்ணயித்த இலக்கை மத்திய அரசு தவறவிட்டது. அதாவது கடந்த நிதியாண்டில் 12 லட்சம் கோடி ரூபாய் வருமான வரிவசூல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இந்த இலக்கை 82ஆயிரம் கோடி ரூபாய் அளவில் தவறவிட்டது. அதேபோல ஜூன் மாத ஜி.எஸ்.டி வருவாய் 1 டிரிலியன் அளவிலிருந்து குறைந்துள்ளது.  ஏனென்றால் இடைக்கால பட்ஜெட்டில் மாத ஜி.எஸ்.டி வருவாய் 1.3 டிரிலியன் தொடும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இந்த இலக்கையும் அரசு தவறவிட்டுள்ளது. 

எனவே நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசிடம் போதிய நிதி ஆதாரமும் இல்லை. அத்துடன் இந்தியாவில் தனியார் முதலீடுகளும் குறைந்துள்ளன. மேலும் ஏற்கனவே அறிவித்துள்ள முக்கிய திட்டங்களான கிஷான் யோஜ்னா திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பார்த் திட்டம் ஆகியவற்றிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும். ஆகவே மத்திய அரசு இதற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசின் அமைப்புகள் தனியார் மையமாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதன் மூலம் வருவாயை புதிய திட்டங்கள் மற்றும் பழைய திட்டங்களுக்கும் ஒதுக்கலாம் என்றும் தெரிகிறது. 

புதிய அறிவிப்புகள்:

மத்திய அரசு கடந்த ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதியை ஏற்படுத்தும் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதனை நிறைவேற்றியது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆட்சி காலத்தில் அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கும் வசதி உள்ளிட்டவற்றில் கவனம் அளிக்கும். 

மேலும் இம்முறை புதிதாக அமைந்துள்ள ‘ஜல்சக்தி’ அமைச்சகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது  ‘ஜல் ஜிவன் மிஷன்’  மற்றும் ‘நல் சே ஜல்’ போன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும். அத்துடன் 2024ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் தரும் திட்டம் கொண்டு வரலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல மின்வளத்துறைக்கு தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மீனவர்களுக்கான ‘மட்சயா சம்படா யோஜ்னா’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய திட்டங்களுடன் சேர்த்து ஏற்கெனவே உள்ள கிஷான் யோஜ்னா திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பார்த் திட்டம் ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

வேலைவாய்ப்பு:

மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன் வெளிவந்த தேசிய மாதிரி புள்ளியல் ஆய்வு மையத்தின் தரவின்படி கடந்த 45 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இம்முறை வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கு சில ஏற்பாடுகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறு,குறு தொழில்கள் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் மற்றும் புதிய நிறுவனங்கள் தொடங்க ஏதுவான சூழல்கள் ஆகியவை உருவாக்கலாம் எனத் தெரிகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com