காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளம் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசு வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டு இருந்ததால் அனந்தசரஸ் குளத்தை தூர்வார முடியவில்லை என்றும், தற்போது சிலை கோவிலில் வைக்கப்பட்டுள்ளதால் குளத்தை தூர்வார உத்தரவிடக்கோரியும் சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த அசோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதன் மீதான விசாரணையின் போது அனந்தசரஸ் குளம் அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்படுவதற்கு முன்பே சுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக இந்து அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து குளத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அரசு வழக்கறிஞர்கள் இருவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.