ஏழு அடி உயரம், எதிரில் நிற்போரை மிரட்டும் உடல்வாகு, 150 கிலோ எடை, சுவரை கூட சிதற வைக்கும் சினிமா ஹீரோ போன்ற வலிமை என்ற அடையாளங்களுடன், உலகம் முழுதும் பிரபலமான WWE (World Wrestling Entertainment) என்ற பொழுதுபோக்கு மல்யுத்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் "தி கிரேட் காளி". இந்நிகழ்ச்சியை பார்ப்போருக்கு, இவர் போட்டியாளர்களை பொம்மைகள்போல பந்தாடும் காட்சிகளை மறக்கவே முடியாது. இன்றைய தினம் இவர் பாஜக-வில் இணைந்திருக்கிறார்.
இதன்மூலம் பொழுதுபோக்கு மல்யுத்த காட்சிகளில் மக்களை மகிழ்வித்த "தி கிரேட் காளி" தற்போது அரசியல் எனும் புதிய களத்தில் தன் பயணத்தை தொடங்கியுள்ளார். உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இன்று, கிரேட் காளி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். WWE மூலம் பிரபலமாகும் முன், தலிப் சிங் ராணா என்ற இயற்பெயரை கொண்ட இவர் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்துள்ளார் காளி. கட்சியில் இணைவது குறித்து பேசுகையில், `மக்கள் சேவைக்காக பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறேன்’ என காளி தெரிவித்தார். இவர் பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், “தி கிரேட் காளி எங்களுடன் இணைவது, இளைஞர்களுக்கும் நாட்டின் பிற மக்களுக்கும் உத்வேகமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
WWE நிகழ்ச்சியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு இந்தியா திரும்பிய காளி, அதன்பின் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட தொழில்களை நடத்தி வருகிறார். ஹிமாச்சப்ல பிரதேசத்தில் பிறந்த இவர், ஒரு அரிய வகை நோய் காரணமாக அதிக வளர்ச்சி அடைந்தார் என்பதும், குறிப்பாக அவருக்கு தாடை வளர்ச்சி இந்த நோயால் அதீதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- கணபதி சுப்ரமணியம்