IT துறை என்றதுமே சொகுசான வேலை, மிடுக்கான வாழ்க்கை, டீம் அவுட்டிங், பார்ட்டி, காதல் கல்யாணம் ஆகியவைதான் நினைவில் எட்டும். ஆனால், ஐடி துறையின் கெடுபிடியான வேலையில் ஏற்படும் மன உளைச்சல்களோ, உடல்நல மற்றும் பொருளாதார பாதிப்புகளோ பொதுபுத்தியோடு பேசுபவர்களுக்கு தெரிந்திருக்காது.
ஐ.டி. துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவுதம் கார்த்தி நடித்திருக்கும் 'இவன் தந்திரன்' படத்தில் ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கும் வசனம் இளைஞர் பட்டாளத்தை பெரிதளவில் கவர்ந்திருக்கும். அந்த பாணியில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மோகன்தாஸ் பாய் கடும் காட்டமாக பேசியிருப்பது பெரும் பரபரப்புக்கு வித்திட்டிருக்கிறது.
பிசினஸ் டுடே இதழுக்கு பேட்டியளித்துள்ள மோகன்தாஸ் பாய், ஐ.டி. துறையில் பிரஷ்ஷர்களுக்கு நிகழும் அநீதியை பொட்டில் அறைந்தார் போல அம்பலப்படுத்தியிருக்கிறார். அதில், “கடந்த ஒரு தசாப்தங்களாக ஐ.டி. நிறுவனங்கள் நல்ல வருவாயை பெற்றிருந்தாலும் புதிதாக வேலைக்கு சேர்வோரை மனிதர்களாகவே மதிப்பதில்லை.
ஐ.டி. துறையில் பிரஷ்ஷர்கள் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறார்கள். 2008-9ம் ஆண்டில் பிரஷ்ஷர்களுக்கு ஆண்டுக்கு மூன்றரை லட்சம் முதல் 3.8 லட்சம் வரை கொடுக்கப்பட்ட அதே சம்பளம்தான் 2022ம் ஆண்டிலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்த போதும் ஐ.டி. நிறுவனங்கள் கணிசமான லாபத்தையே பார்த்து வருகின்றன.
அதன்படி 13-14 சதவிகித வருவாய் ஐ.டி. துறைகளில் அதிகரித்துள்ளன. இருப்பினும் ஜூனியர் மற்றும் பிரஷ்ஷர்களுக்கான உரிய ஊதியம் கிடைக்கப்படாமலேயே இருப்பது ஏன்? அதேவேளையில் சீனியர் ஊழியர்களுக்கு சம்பளம் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் ஐ.டி. நிறுவனங்களின் CXO, CEOக்களுக்கான வருடாந்திர சம்பளம் கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கின்றன. எச்.சி.எல்-ன் ஆண்டறிக்கைப்படி அதன் சி.இ.ஓ சி விஜயகுமாரின் ஆண்டு சம்பளம் 123 கோடி ரூபாயாக இருக்கின்றது. அதேபோல இன்ஃபோசிஸின் CEO சலில் பரேக்கின் சம்பளம் 88 சதவிகிதம் உயர்ந்து 79 கோடி ரூபாயாக இருக்கிறது.
ஜூனியர்களுக்கும், பிரஷ்ஷர்களுக்கும் ஊதிய உயர்வை கொடுக்காத சீனியர்கள் எப்படி தங்களுக்கு மட்டும் சம்பளத்தை உயர்த்தி பெற முடியும்? அவர்களை மனிதர்களை போல நடத்துங்கள். ஐ.டி. துறையின் தற்போதைய கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரவில்லையென்றால் அது வெறும் பணத்துக்கான அமைப்பாக மட்டுமே இருக்கும்.” என மோகன்தாஸ் பாய் கூறியிருக்கிறார்.