முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீல் அன்கோலாவின் தாயார் புனேவில் உள்ள தனது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சலீல் அன்கோலாவின் தாயார், எழுபத்தேழு வயதான மாலா அசோக் அன்கோலா, புனே பிரபாத் சாலையில், ரிட்ஜ் பாதையில் உள்ள தனது குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது கழுத்தில் காயம் இருந்ததால் தற்கொலையாக இருக்கலாமோ என போலீசார் கருதுகின்றனர். இருப்பினும் இது குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
புனேவில் மாலா அசோக் அன்கோலா, தனது மகளின் பெயரில் வாங்கியிருந்த ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மகளும் அருகிலேயே வசித்து வந்தார். அவ்வப்போது தாயாரைப் பார்க்கச்செல்வது மகளின் வழக்கம். மாலாவிற்கு உதவியாக பணிப்பெண் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் பணிப்பெண் வந்து நீண்ட நேரம் அழைப்பு மணியை அடித்தும் கதவு திறக்கவில்லை. ஆகையால் பணிப்பெண் அவரது மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக பிளாட்டின் சாவியுடன் மகள் வேறொருவரை தனது தாயார் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அவர் வந்து கதவைத் திறந்ததும், பணிப்பெண் உள்ளே நுழைந்தபோது மாலா படுக்கையறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மாலாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் தெரிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மாலாவின் கழுத்தில் உள்ள காயங்களை பார்த்த போலீசார் இது தற்கொலை என்று சந்தேகிக்கின்றனர். இருப்பினும் இது தற்கொலையா அல்லது கொலையா என்று விரிவான விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதனிடையே மாலாவின் வீட்டில் இருந்த சிசிடிவி வேலை செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.
சலீல் அன்கோலா
இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் சலீல் அன்கோலா. இவர் 1989-ல் குஜ்ரன்வாலாவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அவர் மகாராஷ்டிராவுக்காக 54 முதல் தர போட்டிகளிலும், 75 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 1997 பிப்ரவரி 13-ம் தேதி அன்று டர்பனில் தனது கடைசி ODI-ல் விளையாடினார். அவர் ஓய்வுக்குப் பிறகு திரைப்படத்துறைக்கு வந்தார்.