தொழிலதிபரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவீன் ஜிண்டால் பாஜகவில் இணைந்துள்ளார். குருஷேத்ரா தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்பியான ஜிண்டால், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்தின் தலைவருமாவார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்தையும் ராஜினாமா செய்துள்ள அவர், “நான் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்து 10 ஆண்டுகள் குருஷேத்ரா தொகுதியின் எம்.பி.யாக இருந்தேன். காங்கிரஸ் தலைமைக்கும் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிற்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
இன்று பாஜகவில் இணைந்த நிலையில், அவரது பெயர் பாஜகவின் ஐந்தாவது கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதே குருஷேத்ரா தொகுதியில் பாஜக சார்பில் களம்காண்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பாஜகவில் இணைந்து, உடனடியாக பாஜக சார்பாக வேட்பாளராகவும் களம்காண்கிறார்.
காங்கிரஸ் கட்சி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவித்திருந்த சுனில் சர்மாவை மாற்றம் செய்துள்ளது. அவருக்கு பதிலாக ப்ரதாப் சிங் கச்சாரியவாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியின் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. இமாச்சல் பிரதேசத்தில் களம் காண்கிறார் பிரபல நடிகை கங்கனா ரனாவத். கர்நாடகா, கேரளா, ஹிமாச்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. பீகாரில் பெகுசாரி தொகுதியில் களம் இறங்குகிறார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். கர்நாடகாவில் பெலகாவி தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சீதா சோரனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சத்யதேவ் பச்சௌரி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிற்கு கடிதம் எழுதிய நிலையில், அதை எக்ஸ் தளத்திலும் பகிர்ந்துள்ளார் பச்சௌரி. 2019 ஆம் ஆண்டு பச்சௌரிக்கு பாஜக சீட் வழங்கியது. பச்சௌரி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள நிலையில் கான்பூருக்கான மாற்று வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் களம் காண்கிறார் பிரபல நடிகை கங்கனா ரனாவத். வேட்பாளராக களமிறங்குவது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாஜகவிற்கு எப்போதும் என் நிபந்தனையற்ற ஆதரவு உண்டு. நான் பிறந்து வளர்ந்த இடமான இமாச்சலில் என்னை மக்களவை வேட்பாளராக பாஜக அறிவித்திருக்கிறது. பாஜகவில் உத்யோகப்பூர்வமாக இணைந்ததை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆணி ராஜாவும் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் கே சுரேந்திரனும் களம் காண்கிறார்கள்.