ஹரியானாவில் 2 மணி நேரத்தில் 6 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நடைப்பெற்ற கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்று அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரை 6 நபர்கள் கடுமையான தாக்குதலுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைச்சம்பவம் 2 முதல் 4 கிலோமீட்டர் தூர இடைவெளியில் நடைப்பெற்று இருந்தது. இதனைக்கொண்டு இந்த சம்பவத்தை ஒருவர் தான் செய்துள்ளார் என காவல்துறையினர் முடிவு செய்தனர். மேலும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்த நபரை பல்வால் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் வைத்து கைது செய்தனர். கைது செய்ய முற்படும் போது அந்த நபர் காவல்துறையினரையும் தாக்கியுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், பல்வாலில் உள்ள மருத்துவமனையில் முதல் படுகொலை சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் அங்கு சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை காண வந்திருந்த பெண் தான் முதலில் பலியாகியுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது நீல நிற மேல்சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த ஒரு நபர் கையில் இரும்பு கம்பியுடன் சுற்றியது தெரியவந்தது. இதற்கிடையில் இதேபோன்று அடுத்தடுத்து 5 படுகொலை சம்பவங்கள் குறித்து தகவல் வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கொலைச்சம்பவம் ஆக்ரா சாலை மற்றும் மைனர் கேட் பகுதிகளுக்குள் 2 முதல் 4 கிலோமீட்டர் தூர இடைவெளியில் நடைப்பெற்று இருந்தது. இதனையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட போது அந்த நபரை பல்வால் பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் வைத்து கைது செய்தோம். கைது செய்ய முற்படும் போது அந்த நபர் காவல்துறையினரையும் தாக்கினான். கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் நரேஷ் குமார் என்பது தெரியவந்தது. இவர் ராணுவத்தில் உயர் பதவியில் பணியாற்றினார் என்றும் தற்போது ஹரியானா வேளாண்துறையில் பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.