மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தான சர்ச்சைக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தற்போது மீண்டும் அதுதொடர்பான புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
மும்பை வடமேற்கு தொகுதியில் 48 வாக்குகள் வித்தியாசத்தில், ஷிண்டே பிரிவைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றார். அந்த சமயத்தில், அங்கு நடந்த கடுமையான போட்டி அதுதொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஷிண்டே வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவரது உறவினர், தனது செல்போன் மூலம் மின்னணு இயந்திரத்தை ஹேக் செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
ஏற்கனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்றும் அதில் தொடர்பு கொள்வதற்கான சிப்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றும், வாக்குகளைப் பதிவு செய்வதற்கான சிப்கள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் பலமுறை தெரிவித்திருந்தது.
மட்டுமன்றி தேர்தல் ஆணையம், பல வருடங்களுக்கு முன்பாகவே இவிஎம் இயந்திரங்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. யார் வேண்டுமானாலும் வந்து இயந்திரங்களை ஹேக் செய்து காட்டலாம் என தெரிவித்திருந்தது. அப்போது நேரடியாகவே யாராலும் ஹேக் செய்து காட்ட முடியவில்லை.
இருப்பினும், புதிய புதிய சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்நிலையில், ராகுல் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் ராகுல் பதிவிட்டுள்ளதாவது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆராய்வதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும்போது ஜனநாயகம் சீர்குலைந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக எலான் மஸ்க் தன் எக்ஸ் பக்கத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். ஏனெனில் மனிதர்கள் அல்லது AI மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது" என்றிருந்தார். அதை ரீ-ட்வீட் செய்து ராகுல் மேற்கூறிய கருத்தை கூறியுள்ளார். அப்பதிவில் மும்பை வடமேற்கு தொகுதி சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.