ஜார்க்கண்ட் முதல்வரின் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி..! அப்படி என்ன செய்தார்?

ஜார்க்கண்ட் முதல்வரின் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி..! அப்படி என்ன செய்தார்?
ஜார்க்கண்ட் முதல்வரின் கனவை நிறைவேற்றிய பிரதமர் மோடி..! அப்படி என்ன செய்தார்?
Published on

ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டாவது விமான நிலையமான தியோகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி; தனது கனவை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி இருப்பதாக முதல்வர் ஹேமந்த் சோரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தியோகர் விமான நிலையம் உள்ளிட்ட 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் ஜார்க்கண்ட் மாநிலம் சென்றடைந்தார். ஜார்க்கண்ட் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் அம்மாநில ஆளுநர் ரமேஷ் பைஸ் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அரசுத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் மேடைக்கு சென்றார். இந்த விழாவில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் முதலாவதாக பேசிய ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில், கடந்த 2010-ம் ஆண்டு காணப்பட்ட தியோகர் விமான நிலையத்தின் கனவை பிரதமர் நரேந்திர மோடி தற்போது நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில் இந்த புதிய விமான நிலையம் எங்களுக்கு பெருமை அளிப்பதாகவும் ஹேமந்த் சோரன் பேசினார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ரூ.400 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தியோகர் விமான நிலையத்தை திறந்து வைத்தார். இந்த புதிய விமான நிலையம் வாயிலாக நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் எளிதாக இனி ஆன்மீக தலமான பாபா வைத்தியநாத் தாமிற்கு நேரடியாக செல்ல முடியும். ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தி தரும் வகையில் முனைய கட்டிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதனை அடுத்து 3,000 ரூபாய் கோடி மதிப்பிலான ஏராளமான எரிசக்தி உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். மேலும் கோடா-ஹன்சிதா மின்மயமாக்கப்பட்ட பிரிவு மற்றும் கர்வா-மஹுரியா இரட்டிப்பாக்கப்பட்ட திட்டம் ஆகிய இரண்டு ரயில்வே திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். அதே நேரத்தில் ரூபாய் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு புதிய சாலை திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

மிக முக்கியமாக தியோகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு முக்கிய வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில் நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், விமான பாதைகள், நீர் வழிகள் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தை இணைக்கும் முயற்சியில் உத்வேகம் முதன்மையானது.

இன்று தொடங்கப்பட்ட திட்டங்களால் ஜார்கண்ட் மாநிலம் மட்டுமல்லாமல் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளும் நேரடியாக பயனடையும். அதாவது இந்த திட்டங்கள் கிழக்கு இந்தியாவின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தும். தேசத்தின் வளர்ச்சி மாநிலங்களின் வளர்ச்சி. நாடு கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த சிந்தனையுடன் தான் செயல்பட்டு வருகிறது. நான்காண்டுகளுக்கு முன்பு தியாகர் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

கொரோனாவின் சிரமங்கள் இருந்த போதிலும் அதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. இன்று ஜார்கண்ட் மாநிலம் இரண்டாவது விமான நிலையத்தை பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் விமான பயணிகள் தியோகர் விமான நிலையத்தில் இருந்து செல்ல முடியும். அரசின் முயற்சியின் பலன் நாடு முழுவதும் இன்று தெரிகிறது சாதாரண குடிமக்கள் 400-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களில் விமான பயண வசதியை பெறுகின்றனர் என்றார்.

இதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி விழா மேடையில் இருந்து வாகனம் மூலம் புறப்பட்டபோது சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் மோடி, மோடி என குரல் எழுப்பினர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி வாகனத்தில் இருந்தபடியே சாலையின் இரு புறங்களிலும் குடியிருந்த பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.

ஜார்க்கண்ட் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பீகார் சட்டமன்றத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அதே நேரத்தில் பீகார் சட்டமன்றத்தில் நூற்றாண்டை குறிக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷதாப்தி ஸ்மிருதி ஸ்தம்பத்தை திறந்து வைத்து சட்டமன்ற அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநில பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

- விக்னேஷ் முத்து, டெல்லி செய்தியாளர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com