காஷ்மீரின் கள நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்துவந்த விவகாரத்தில், வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய தவறை மத்திய அரசு செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை வேண்டுமென்றே சர்வதேச பிரச்னையாக மோடி அரசு மாற்றியது எனவும் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போதைய கள நிலவரம் குறித்து அறிவதற்காக தனிப்பட்ட முறையில் ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்தனர். அவர்களில் 23 பேர் ஸ்ரீநகர் சென்றனர். இந்திய அரசியல் தலைவர்களுக்கு காஷ்மீரின் நிலை குறித்து நேரில் அறிந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்புப் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின.
முன்பின் தெரியாத தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டவரை அழைத்து வந்திருப்பதாகவும் வெளியுறவுக் கொள்கையை மதிக்காமல் செயல்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டினார். உள்நாட்டுப் பிரச்னையாக இருந்த காஷ்மீர் விவகாரத்தை வேண்டுமென்றே சர்வதேச பிரச்னையாக மோடி அரசு மாற்றியது என்று குற்றஞ்சாட்டிய சுர்ஜேவாலா, இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்படும் எனத் தெரிவித்தார்.