22 வயது இளைஞரிடமிருந்து பிரிந்துசென்ற மனைவி இளைஞரின் 48 வயது தந்தையையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்தேறியுள்ளது.
திருமணம் மற்றும் உறவு பற்றிய வித்தியாசமான பல செய்திகளை நாம் தினந்தோறும் பார்க்கிறோம். அவற்றில் சில இப்படியெல்லாம் நடக்குமா என்று யோசிக்கும் அளவிற்கு மிகவும் விசித்திரமானதாக இருக்கும். அதுபோன்றதொரு சம்பவம் தற்போது உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
22 வயது நபர் தன்னிடமிருந்து பிரிந்துசென்ற மனைவியைப் பற்றி தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இளைஞரின் தந்தை அவருடைய சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று தனியாக வசித்து வந்திருக்கிறார். அதன்பிறகு அந்த இளைஞருக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இருவரும் மைனராக இருந்ததால் திருமணமான 6 மாதத்திலேயே இவர்களுக்குள் தகராறு வர ஆரம்பித்திருக்கிறது. எனினும் சிலகாலம் ஒன்றாக இருந்த இவர்கள் பிரிந்துவிட்டனர். தற்போது இவர்களுக்கு 2 வயது மகன் இருக்கிறான். எனவே தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ நினைத்த இளைஞர் மனைவியை நாடியிருக்கிறார். ஆனால் அந்த பெண் சேர்ந்துவாழ மறுத்ததுடன் விவாகரத்துக் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த இளைஞர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நாடியிருக்கிறார். அதன்மூலம் தனது மனைவி துப்புரவு தொழில் செய்யும் வேறொருவருடன் சேர்ந்து வாழ்வது தெரியவந்திருக்கிறது. அந்த நபர் யாரென்று விசாரித்தபோது, குடும்பத்தை விட்டுச்சென்ற தனது 48 வயது தந்தையை திருமணம் செய்துகொண்டு அவருடன்தான் தன்னுடைய மனைவி வசித்துவருகிறார் என்ற தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் இருவரும் அதே மாநிலத்திலுள்ள சாம்பல் நகரில் வசித்து வருவதும் தெரியவந்திருக்கிறது.
இதனால் மனமுடைந்த இளைஞர் இதுகுறித்து பிசௌலி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதில், குடும்பத்தைவிட்டு பிரிந்துசென்ற தந்தை தங்களுக்கு உதவிப்பணம் எதுவும் அளிக்கவில்லை எனவும், மேலும் தனது மனைவியுடன் வசித்துவருகிறார் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் இருவருக்கும் திருமணமானபோது அவர்கள் மைனர் என்பதால் திருமணம் பதிவு செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என விசாரித்த போலீஸார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த தகவலில் கூறியிருக்கின்றனர். இதற்கிடையே அந்த பெண் தற்போதைய திருமண வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.