"தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை வகிக்கும்" என நேற்று இரவு நடைபெற்ற அதிமுக - பாஜக உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் JP நட்டா ஆகியோருடன் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த ஆலோசனையின்போது அவருடன் பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். ஆலோசனையின் முடிவில், அடுத்த வருட நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அடுத்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிடும் எனவும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
‘தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்பதே பிரதான இலக்கு’ என்பதையும் ‘அதிமுக-பாஜக உரசல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்’ என்பதையும் கருத்தில்கொண்டே இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் “அதிமுக - பாஜக கூட்டணி சிக்கல்கள் இல்லாமல் செயல்பட, தேவையற்ற கருத்துக்களை தவிர்க்க வேண்டும். வரும் மாதங்களில் தலைமை மட்டத்தில் ஆலோசனைகள் தொடரும். DMK Files போன்ற விவகாரங்களை மக்களிடம் கொண்டு செல்ல பாஜக மற்றும் அதிமுக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். அடுத்த வருட மக்களவை தேர்தல் மற்றும் அடுத்த சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பரம் எதிர்மறை கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்” போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த உயர்மட்ட ஆலோசனையின் தாக்கமாக, அண்ணாமலையின் சமீபத்திய கருத்தான ‘பாஜக-வுக்கு தனித்துப் போட்டியிடும் வலிமை உள்ளது’ என்பதில் நிலவிவந்த சந்தேகங்கள் களையப்பட்டுள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓ பன்னீர்செல்வம் விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. ‘நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஓபிஎஸ் சச்சரவு குறித்து தற்போது ஆலோசனை தேவை இல்லை ’என்கிற அதிமுக தலைவர்களின் கருத்துக்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான சக்திகள் ஒன்றிணை வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடாக தொடர்கிறது.
அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகள் தொடர்வதோடு, பிற ஒத்த கருத்துடைய கட்சிகளும் இணைய வேண்டும் என இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.