ஓய்வூதிய நிதிகளை சேமித்துவைக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)-வில், வட்டி விகிதம் 8.15% என 2022-23ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த வருடமான 2021-22-ல் இந்த தொகை 8.1% என நிர்ணயிக்கப்பட்டது. இது கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைவானதாக இருந்தது. இதற்கு முன் 1977-78-ல் தான் இந்த வட்டி விகிதம் 8% என இதன் வட்டிவிகிதம் குறைந்திருந்தது.
இவ்வருடத்துக்கான அறிவிப்பில் PTI, "ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) சார்பாக செவ்வாயன்று நடந்த கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான EPF க்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது" என்று கூறியுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, இந்த வட்டி விகிதத்தை அரசின் நிதி அமைச்சகம் சரிபார்த்து ஒப்புதலளித்த பின்னரே பின்னரே வழங்கும் என தெரிகிறது. முன்னதாக EPFO அதன் சந்தாதாரர்களுக்கு 2016-17 இல் 8.65 சதவீத வட்டி விகிதத்தையும் 2017-18 இல் 8.55 சதவீதத்தையும் வழங்கியது.
2015-16ல் வட்டி விகிதம் சற்று அதிகமாக 8.8 சதவீதமாக இருந்தது. ஓய்வூதிய நிதி அமைப்பு 2013-14 மற்றும் 2014-15ல் 8.75 சதவீத வட்டியை வழங்கியது, இது 2012-13ல் 8.5 சதவீதத்தை விட அதிகமாக இருந்தது.
2011-12ல் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக அது இருந்தது. தற்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் சுமார் 7 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர் என தெரிகிறது.