தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதத்திலிருந்து 8 புள்ளி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளாக பிஎஃப்பிற்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. 2012-13ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8 புள்ளி 5 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டது. இதுவே அடுத்து வந்த 2013-14 மற்றும் 2014-15ஆம் நிதியாண்டுகளில் 8 புள்ளி 75 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 2015-16ஆம் நிதியாண்டில் பிஎஃப்க்கு வட்டி விகிதத்தை சற்று உயர்த்தி 8 புள்ளி 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது.
அடுத்து வந்த ஆண்டுகளில் பிஎஃப் வட்டி விகிதம் சற்று குறைக்கப்பட்டது. 2016-17ஆம் நிதியாண்டில் வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவிகிதமாகவும், 2017-18ஆம் நிதியாண்டில் 8 புள்ளி 55 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டது.
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பிஎஃப் வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவிகிதமாக இருந்த நிலையில், நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் வட்டி விகிதம் 8 புள்ளி 50 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிஎஃப் வட்டி விகிதம் குறைப்பு தொடர்பாக தொழிலாளர் நலத்துறை நிதித்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிகிறது. அதற்கு விளக்கமளித்துள்ள நிதித்துறை, குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தின் தொகை, அரசின் சிறு சேமிப்பு மற்றும் தபால் துறை சேமிப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது.