ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு! அதற்கு இதுதான் காரணம்

ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு! அதற்கு இதுதான் காரணம்
ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு! அதற்கு இதுதான் காரணம்
Published on

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. ஏன் என்பதை இத்தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் மோசடிகளின் மன்னனாக அறியப்படும் சுகேஷ் சந்திரசேகர் பலரை ஏமாற்றி பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை குவித்திருந்தாலும், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு மட்டும் என்னவோ நல்லவராக நடந்துகொண்டிருக்கிறார். தான் சட்டவிரோதமாக குவித்த சொத்துகளிலிருந்து விலையுயர்ந்த உடைகள், நகைகள், கார் என ஜாக்குலினுக்கு பரிசுகளை வாரி இறைத்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர். இதுதான் தற்போது நடிகை ஜாக்குலினுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

சுகேஷ் சந்திரசேகர் மோசடியாக சம்பாதித்த தொகையிலிருந்து ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு சுமார் 5.71 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்கத்துறை, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாக்குலினுக்கு சொந்தமான 7.12 கோடி மதிப்பிலான வைப்புத் தொகையையும், 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்திருக்கிறது.

சுகேஷ் சந்திரசேகர் தனது கூட்டாளியான பிங்கி இரானி என்பவரை பயன்படுத்தி இந்தப் பணத்தை கொடுத்திருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத் தருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவரும் இந்த சுகேஷ் சந்திரசேகர்தான். ஆனால் அவர் சிறையில் இருந்தபோதே, சிறை அதிகாரிகளின் உதவியுடன் 200 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. சிறையில் இருக்கும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவன நிறுவனர் ஷிவிந்தர் மோகன் சிங்கிற்கு பிணை வாங்கி தருவதாக அவரது மனைவி அதிதி சிங்கை தொலைபேசியில் ஏமாற்றி 200 கோடி ரூபாய்க்கும் மேல் பறித்திருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர்.

இந்த மோசடி தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியாபால், கூட்டாளி பிங்கி இரானி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாக்குலின் ஃபெர்னாண்டெஸ் இதுவரை குற்றவாளியாக சேர்க்கப்படமால் இருந்து வந்தார். ஆனால் தற்போது நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்ஸையும் குற்றவாளியாக சேர்க்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com