ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் நிதி நெருக்கடி காரணமாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பெரும் நிதி சிக்கலில் தவிக்கிறது. ஜெட் ஏர்வேசின் கடன் சுமை பெரிதும் உயர்ந்து விட்ட நிலையில் அந்நிறுவனத்தை உருவாக்கிய நரேஷ் கோயல், தலைமை பதவியிலிருந்து விலகிவிட்டார். இதனால் அந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்த வங்கிகள் நிர்வாகத்தை தற்காலிகமாக தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளன.
ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வேறு நிறுவனத்திற்கு விற்று தங்கள் கடனை ஈடு செய்யும் வங்கிகளின் முயற்சி இதுவரை எதிர்பார்த்த பலனை தரவில்லை. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாகவே ஊதியம் கிடைக்காததால் நகைகளை அடமானம் வைத்தும் சொத்துக்களை விற்றும் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலைக்கு ஜெட் ஏர்வேஸ் பணியாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலர் தாங்கள் இருந்த வீட்டுக்கு வாடகை செலுத்தாதால் வேறு வீட்டிற்கு இடம் மாற வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இயங்கிக் கொண்டிருந்த சில விமானங்களும் கடந்த வாரம் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் ஜெட் ஏர்வேஸின் 15 ஆயிரம் பணியாளர்களும் எதிர்காலம் குறித்த அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து டெல்லியில் இவர்கள் ஒன்று திரண்டு தங்கள் நிறுவனத்திற்கு புத்துயிர் தர அரசு உதவ வேண்டும் எனப் பேரணியாக சென்று அரசுக்கு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்