ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் ஐ.டி ஊழியர்கள் மீண்டும் பணிக்குச் செல்ல திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் முன்னதாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை சில தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்தது. மேலும் இந்த தளர்வுகள் மாவட்டங்களின் நிலைமையை பொருத்து வேறுபடும் என்பதால் அது குறித்த முடிவுகளை மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.
அதன்படி மாநிலங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப மாவட்டங்களை பிரித்து அவற்றை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. அந்த வகையில் இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் பகுதியில் உள்ள ஐ.டி நிறுவனத்திற்கு மீண்டும் ஊழியர்கள் பணி செய்ய திரும்பி இருக்கின்றனர். நிறுவனத்திற்குள் நுழையும் முன்னர் அவர்களின் உடல் வெப்ப நிலை அளவிடல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்குவது குறிப்பிடத்தக்கது.