பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹீமுக்கு, பத்ம விருது வழங்கக் கோரி, 4,208 பேர், பரிந்துரைத்த தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப், ஹரியானாவில் புகழ்பெற்ற, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர், குர்மீத் ராம் ரஹீம், 2002ல், பெண் துறவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரித்த, சி.பி.ஐ. நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீமுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து, ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லியில், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், 38 பேர் பலியாயினர்கள், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், பல்வேறு துறைகளில் சாதித்த, சிறந்த குடிமகன்களுக்கு வழங்கப்படும், 2017ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய, பத்ம விருதுகளை, ராம் ரஹீமுக்கு வழங்க, 4,208 பேர் பரிந்துரைத்த தகவல் வெளியாகியுள்ளது. கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதித்தவர்களை கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்க பொதுமக்கள் ஆன்-லைனில் மத்திய அரசிடம் பரிந்துரைக்கலாம்.
இந்நிலையில் ராம் ரஹீமின் ஆசிரமம் அமைந்துள்ள, ஹரியானா, பஞ்சாப் மற்றும் அவர் பிறந்த மாநிலமான ராஜஸ்தானிலிருந்து பல போலியான பெயர்களில் அவருக்கு பத்ம விருது வழங்கக் கோரி, பல பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதில், ஒரே நபரின் பெயரில், பல பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவை, ராம் ரஹீமின் ஆசிரம முகவரியிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. இதனால் குர்மீத்தின் ஆதரவாளர்கள் இவ்வாறான செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.