கர்நாடக மாநிலம் தாவணிக்கரை மாவட்டம் ஹோன்னாளி காசினகெரே கிராமத்தில் வசித்து வந்தவர் திப்பெஷ் (21). இவர் கடந்த 16ஆம் தேதி இரவு அனவேரி என்ற கிராமத்தில் இருந்து காசினகெரே நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். அப்போது, குறுபரவித்லபுரா என்ற கிராமத்தில் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு நாய் ஓடிவந்தது.
இதனால், நாய் மீது மோதாமல் இருக்க இருசக்கர வாகனத்தை திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த திப்பேஷ் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியும் அடுத்த நாள் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் விபத்துக்கு காரணமான நாய், நேற்று இரவு திப்பேஷ் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று சுற்றி பார்த்தது. அதன் பின் திப்பேஷ்-ன் தாய் முன் சென்ற நாய் மன்னிப்பு கேட்பது போல் கால்களை மடக்கி அமர்ந்து, தன் காலால் திப்பேஷ் தாயின் கையை வருடியது. இதனால் அவர் கண்கலங்கிய நிலையில், “நீ எந்த தவறும் செய்யலை. எல்லாம் விதி” என்று நாயை பார்த்து ஆறுதல் கூறியுள்ளார். இந்த தாயின் பெயர், யசோதாம்மா.
இதை பார்த்து திப்பேஷ் உறவினர்கள் கண்களும் குளமானது. பின் அந்த நாய் அங்கிருந்து சென்று விட்ட நிலையில், தன் தவறை உணர்ந்து நாய் மன்னிப்பு கேட்டு சென்றதாக அக்கிராம மக்கள் பேசி வருகின்றனர். தற்போது அந்த நாய், திப்பேஷின் வீட்டில்தான் உள்ளதாம். அந்த தாய், “இறுதிச்சடங்கு முடிந்த உடனே அந்த நாய் எங்கள் வீட்டுக்குள் வர முயன்றது. அருகிலிருந்த தெருநாய்கள் சில தடுத்துவிட்டன. எப்படியோ பின் வந்துவிட்டது. தற்போது எங்களோடுதான் இருக்கிறது” என்றுள்ளார்.