புதிதாக பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவிகிதம் வரை குறைத்துள்ளது விப்ரோ நிறுவனம்.
கொரோனா தொற்று சமயத்தில் அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள், உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் என வரிசையாகப் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை கொத்துகொத்தாக பணியில் இருந்து நீக்கி வருகின்றன.
இச்சூழலில், இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, ஏற்கனவே ஆட்குறைப்பு செய்த நிலையில், தற்போது ஊழியர்களின் சம்பளத்திலும் கைவைத்துள்ளது. அதன்படி புதிதாக பணிக்கு சேருபவர்களின் ஊதியத்தில் 50 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என அறிவித்து உள்ளது. பயிற்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த புதிய ஊழியர்களுக்கு ரூ.6.5 லட்சம் வருடாந்திர சம்பளமாக நிர்ணயித்திருந்தது. ஆனால் தற்சமயம் பொருளாதார நெருக்கடி காரணத்தால் புதிய ஊழியர்களுக்கு ரூ.3.5 லட்சம் மட்டும் வருடாந்திர சம்பளமாக கொடுக்கப்படும் எனவும், இந்த ஆஃபரை புதிய ஊழியர்கள் ஏற்றக் கொண்டால், அவர்கள் மார்ச் மாதம் முதல் ஆன்போர்டு செய்யப்படுவார்கள் என விப்ரோ நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக கூறுகின்றனர் ஊழியர்கள்.
இந்த அறிவிப்பைக் கேட்டு விப்ரோ ஊழியர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ஐடி ஊழியர்களின் பணி பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், சம்பளக் குறைப்பை எதிர்த்து சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.