உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் இந்தியா வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் யூகங்கள் பரவி வரும்நிலையில், பே டிம் நிறுவனரின் ட்விட்டரும் வைரலாகி வருகிறது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரரர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் இவர், புகழ்பெற்ற சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை 3.30 லட்சம் கோடிக்கு வாங்கினார். இதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் 44 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆக்ரா கோட்டையின் முகப்பு பகுதி எத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், ஆக்ரா கோட்டை மிகப் பிரமாதமாக இருப்பதாகவும், 2007-ம் ஆண்டு, தாஜ்மஹாலை நேரில் பார்த்ததாகவும், அது உண்மையிலேயே உலக அதிசயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து எலான் மஸ்க்கின் தாய், தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்கை டேக் செய்து, 2012-ம் ஆண்டில் தாஜ்மஹாலை அவர் கண்டுகளித்ததையும், அவரது பெற்றோர் 1954-ம் வருடம் தாஜ்மஹாலை கண்டு ரசித்த புகைப்படங்களையும் பகிர்ந்து நினைவுக் கூர்ந்தார். இதனால் மீண்டும் இந்தியாவிற்கு வர ஏதும் திட்டம் உள்ளதா என ஏராளமான ட்விட்டர் பயனாளிகள் எலான் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பேடிஎம் (Paytm) நிறுவனர் விஜய் சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவில் உள்ள சாலைகளுக்கு ஏற்றார்போல் டெஸ்லா காரை (Full Self-Driving) உருவாக்குவது மிகப் பெரிய சவாலாக இருக்கும். சாலை விதிகளை கடைப்பிடிக்காதவர்களாக நாங்கள் பெரும்பாலும் அறியப்படுகிறோம். டெஸ்லாவை, தாஜ்மஹாலில் முதலில் டெலிவரி செய்ய, நீங்கள் எப்போது இங்கு வருகிறீர்கள்?' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமான டெஸ்லா கார் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க, எலான் மஸ்க்கிடம் பல்வேறு மாநிலங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால், எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவில் என்னுடைய கார்களை தயாரித்து விற்க மத்திய அரசிடம் இருந்து ஏராளமான சவால்கள் வருகின்றன. இந்தியாவில் டெல்ஸாவை இறக்குமதி செய்ய நினைத்தால், பேட்டரி கார்களுக்கு உலகிலேயே அதிகமான வரி இந்தியாவில்தான் விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசோ, இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைத்து இங்கு தயாரித்தால்தான் எலான் மஸ்க்கின் கார்களை விற்க அனுமதிப்போம் என்று தெரிவித்தநிலையில், தற்போது இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.