நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகள் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 14ஆம் தேதி, தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதன்படி ஏர்டெல்லை நடத்தும் பார்தி குழுமம், முத்தூட் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, எம்ஆர்எஃப், சியட், வேதாந்தா, ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப் என பல பிரபல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்தது.
இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் மதிப்புக்கு பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்தது. இதில், 2019, ஏப்ரல் 12 முதல் 2024, ஜனவரி 24 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கிய முதல் 30 நிறுவனங்களில் குறைந்தது 14 நிறுவனங்கள் மத்திய அல்லது மாநில விசாரணை அமைப்புகளால் நடவடிக்கையை எதிர்கொண்டதாக தரவுகள் தெரிவித்துள்ளன.
தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம் என்பது 2018 ஆம் ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், எஸ்பிஐ வழங்கி, தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்த பட்டியலில் 2019 ஏப்ரல் 12 ஆம் தேதியில் இருந்துதான் தகவல்கள் இருந்தன. இந்நிலையில் ஏப்ரல் 12 2019 ஆம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்திற்கான தகவல்கள், தேர்தல் ஆணையத்தால் உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட கவரில் இன்று சமர்பிக்கப்பட்டது. இத்தகவல்கள், நிறுவனங்களிடம் இருந்து பெற்ற பத்திரங்களின் அடிப்படையில், அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தவை.
இதில் திமுக, அதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே தங்களது நன்கொடையாளர்களை தெரிவித்துள்ளன. அதேவேளையில் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது நன்கொடையாளர்கள் யார் என்பதை தெரிவிக்கவில்லை.
இந்த பட்டியலில் பாஜக ரூ.6,986.5 கோடி ரூபாய் நிதிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 2019 முதல் 2020 ஆம் ஆண்டுகளில் அதிகபட்சமாக 2,555 கோடிகளை பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மொத்தமாக ரூ.1397 கோடி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. ரூ.1334 கோடி ரூபாயுடன் காங்கிரஸ் மூன்றாம் இடத்திலும், பிஆர்எஸ் ரூ.1322 கோடியுடன் நான்காம் இடத்திலும் உள்ளது.
ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் ரூ.944.5 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும், திமுக 656.5 கோடியுடன் ஆறாவது இடத்திலும் உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 442.8 கோடியுடன் ஏழாவது இடத்தில் உள்ளது.