கடந்த 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறலாம். இந்த சட்டத்தில் உள்ள பல சரத்துகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொது நல அமைப்புகள் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அனுப் சவுத்ரி என்பவர் முறையிட்டார்.
வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கு விசாரணையை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். அதன்படி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை மூன்று நாட்கள் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
இதில் ஐந்து நீதிபதிகள் அமர்வு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி சந்திரசூர் கூறுகையில், “தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிதி 19 (1)(a)யை மீறும் ஒன்று, மேலும் அரசியலமைப்பிற்கு எதிரானது. தேர்தல் பத்திரங்களை வழங்கும் வங்கி தேர்தல் பத்திரங்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் தேர்தல் பத்திரங்கள், தேதி, மதிப்பு உள்ளிட்ட விவரங்களை வெளியிடுமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 12, 2019 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்பிக்குமாறும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து விவரங்களையும் 2024 மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணையத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “தேர்தல் பத்திரத் திட்டத்தையும், அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட அனைத்து விதிகளையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது” என தெரிவித்தார்.