காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், காந்தி குடும்பத்தைச் சேராத தலைவர்கள் களத்தில் இறங்குவார்களா என்பது குறித்து கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவுகிறது. ஒருவேளை ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டால், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் அல்லது ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவரை களம் இறக்க வேண்டும் என சோனியா காந்திக்கு நெருக்கமான தலைவர்கள் கருதுகிறார்கள்.
அடுத்த தலைவர் யார்? குழப்பத்தில் காங். கட்சி!
சோனியா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடாவிட்டால், அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் அல்லது ஆனந்த் ஷர்மா ஆகியோரில் ஒருவரை களம் இறக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதைத் தவிர தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் ராகுல் காந்தியின் நம்பிக்கையை பெற்ற தலைவர்களுள் ஒருவராக திகழும் முகுல் வாஸ்னிக் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ள நிலையில், அடுத்தத் தலைவர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் எந்த தெளிவும் தற்போது இல்லை.
ராகுல் தலைவராக பலரும் விருப்பம்?
சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் அவருடன் பயணம் செய்கிறார்கள். ராகுல் காந்தி நாடு திரும்பியவுடன் மீண்டும் அவரை கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க வலியுறுத்தும் படலம் தொடரும் எனவும் கட்சியின் பல மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மீண்டும் அந்த பொறுப்புக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக கட்சியின் இளம் தலைவர்கள் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் தலைவர் பொறுப்பை தொடர்ந்து மறுக்கும் ராகுல்!
ராகுல் காந்தி கட்சியின் தலைமையை ஏற்க சம்மதித்தால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால் ராகுல் காந்தி இதுவரை இந்த கோரிக்கையை மறுத்து வருகிறார்.
சோனியா விலகலுக்கு பின் துவங்கிய ‘தலைவர்’ சர்ச்சை! எப்போது முடியும்?
சோனியா காந்தி தற்போது இடைக்கால தலைவராக தொடர்ந்து வரும் நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அவர் அந்த பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை. 2019 ஆம் வருடம் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த சமயத்தில் இருந்து தற்போது வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகிறார் என்றாலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத், கபில் சிபல், அம்ரிந்தர் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்பிஎன் சிங் மற்றும் சுஷ்மிதா தேவ் உள்ளிட்ட பலர் விலகி விட்டனர். இதைத் தவிர ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கட்சியில் உட்பூசல் நிலவுகிறது.
புத்துயிர் அளிக்கப் போகும் தலைவர் யார்?
மேலும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கமல் நாத் தலைமையில் ஆட்சி அமைத்தாலும், பாரதிய ஜனதா கட்சி அந்த அரசை கவிழ்த்து சிவராஜ் சவுகான் தலைமையில் தனது அரசை நிலைநிறுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் இணைந்து இருந்த கூட்டணி அரசு கவிழ்ந்து, அதிகாரம் மீண்டும் பாரதிய ஜனதா பக்கம் சென்றுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் கட்சிக்கு புத்துணர்ச்சி அளித்து வெற்றிப்பாதையில் திருப்பக்கூடிய தலைவர் தேவை என தொண்டர்கள் கருதுகின்றனர். ராகுல் காந்தியே கட்சித் தலைமைக்கு சரியானவர் என்று அவரது ஆதரவாளர்களும் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல புதிய தலைமை தேவை என அதிருப்தி தலைவர்களும் கருதும் நிலையில், கட்சித் தலைவராக யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- கணபதி சுப்பிரமணியம், ச.முத்துகிருஷ்ணன்.