செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூர் ரூரல், பெங்களுர் வடக்கு, பெங்களுர் மத்திய, பெங்களுர் தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு வரும் 26 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பணம், தங்க நகைகள், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் ஆங்காங்கே கண்காணித்து, வாகங்களை சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோலார் மாவட்ட எல்லையான ராமசந்திரா கேட் அருகே நேற்றிவு தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த வாகங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் பைரதி சுரேஷ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை தடுத்து நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள், சோதனைக்கு பின்னர் காரை கோலார் மாவட்டத்திற்குள் அனுமதித்தனர்.