தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அருண் கோயலின் ராஜினமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுள்ளதாக மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய அரசின் செயலாளர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டார். அப்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், 2027ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நிலையிலும், விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலிலும், அருண் கோயலின் ராஜினாமா கவனம் பெற்றுள்ளது. அவரது ராஜினாமாவிற்கான காரணங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும், பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேற்பாடுகளே இந்த ராஜினாமாவிற்கான காரணங்கள் என இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் என்டிடிவி செய்தி நிறுவனம், தனிப்பட்ட காரணங்களுக்காகவே கோயல் ராஜினாமா செய்ததாகவும், அரசாங்கம் அவரை பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தியும் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை அரசாங்க அதிகாரிகள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையத்தில் 3 ஆணையர் பதவிகள் உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார். ஏற்கெனவே அனுப் பாண்டே தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், அந்த காலியிடமே இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது, அருண் கோயலும் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அடுத்தவாரம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்த ராஜினாமா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 7 1962ல் பட்டியாலாவில் பிறந்தவரான அருண் கோயல், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் M.Sc கணிதம் பயின்றவர். மேலும் படிக்கும்போது, அனைத்து தேர்வுகளிலும் சாதனைபடைத்து முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்காக பல்கலைக்கழகத்தில் இருந்து விருதுகளையும் பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் உள்ள சர்ச்சில் கல்லூரியில் development economics பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் John F Kennedy School of Governmentல் பயிற்சியையும் முடித்துள்ளார்.
1985 ஆம் ஆண்டு பஞ்சாப் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அருண் கோயல், 1989 ஆம் ஆண்டு எஸ்.டி.ஓ.வாக தனது பணியை தொடங்கியுள்ளார். மத்திய கலாசாரத்துறை, தொழிலாளர்
நலத்துறை, நிதித்துறை, டெல்லி மேம்பாட்டு கழகம் மட்டுமின்றி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு அரசுத்துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.
2019ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய அருண் கோயல், 2019ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் கனரக தொழில்துறை செயலாளராக பணியாற்றினார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் தனது பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில் அருண் கோயல், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார்.
அதற்கு அடுத்த நாளே, அதாவது 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியே தேர்தல் ஆணையராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார் தலைமையின் கீழ் தேர்தல் ஆணையர்களாக அருண் கோயல் மற்றும் அனுப் சந்திர பாண்டேவும் பணியாற்றினர்.
அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தன. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போது, அருண் கோயல் நியமனம் குறித்து நீதிபதிகள் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக, அவசர அவசரமாக நியமித்தது ஏன் என கேள்வி கேட்டனர். எனினும், அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
2027ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில் அருண் கோயல், தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 2023ன் படி, மக்களவைத் தேர்தலுக்கு முன், மத்திய அரசு புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவின் விதிகளின்படி, இரண்டு குழுக்கள் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யும் பணியில் செயல்படும். அதன்படி, பரிந்துரைக் குழுவில் சட்ட அமைச்சர் தலைமையில் இரு அரசாங்க செயலாளர்கள் கொண்ட குழு, ஐந்து நபர்களைப் பரிந்துரைக்கும். இந்த ஐந்து பேரில் தகுதியான நபரை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும். தேர்வுக் குழுவில், பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் அல்லது மக்களவையில் மிகப்பெரிய கட்சியின் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.