மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை தரக்குறைவாக பேசியதற்காக தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜித்திற்கு 24 மணி நேரம் பரப்புரை் செய்ய தடை பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.
ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலின் 5-கட்ட தேர்தல் தற்போது வரை நிறைவடைந்துள்ளது. தேர்தலின் ஏற்படும் வன்முறைகளை காட்டிலும் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் வார்த்தைகளில் எழும் வன்முறைதான் பெரும் சர்ச்சையையும் விமர்சனத்தையும் பெற்று வருகின்றது.
அந்தவகையில், தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவான வார்த்தையை சமீபத்தில் பேசி இருந்தார். இது பலரிடையே கடும் விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட 24 மணி நேரம் தடை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.
அபிஜித் பாஜக சார்பில் மேற்கு வங்காளம் தம்லுக் மக்களவை தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதற்காக கடந்த மே 15-ஆம் தேதி மேற்கு வங்கத்தின் ஹால்டியாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது மம்தா பானர்ஜி குறித்து இழிவான கருத்துகளை தெரிவித்திருந்தார்.
இவரின் இந்த பேச்சு குறித்த திரிணாமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பான தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, “ அபிஜித்யின் கருத்து ஒவ்வொரு அர்த்தத்திலும் கண்ணியத்திற்கு அப்பாற்பட்டது. தரம் தாழ்ந்த தனிப்பட்ட தாக்குதலில் அபிஜித் கங்கோபாத்யாய் ஈடுபட்டுள்ளார் என்பதும், மாதிரி நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்பதும் உறுதியாகிறது.
அபிஜித் கங்கோபாத்யாயாவின் கல்வி மற்றும் அவர் வகித்த பதவி ஆகியவற்றின் பின்னணியைக் கொண்டு பார்க்கும்போது, அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து இதுபோன்ற அருவருப்பான வார்த்தைகள் வந்துள்ளதை எண்ணி தேர்தல் ஆணையம் வேதனைப்படுகிறது. ஆகவே, இன்று மே 21) மாலை 5 மணியில் இருந்து 24 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை செய்ய இவருக்கு தடை விதிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.
வருகின்ற மே 25-ஆம் தேதி இந்த தொகுதிற்காக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், பாஜக வேட்பாளரின் இத்தகைய பேச்சு மேற்குவங்க அரசியல் களத்தில் சற்று பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நிதிபதியாக பணியாற்றியவர்தான் அபிஜித். இவர் தான் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன்பே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாஜகவில் இணைந்த இவர், தற்போது பாஜக சார்பில் தம்லுக் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.