பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தின் காரணமாக மேற்கு வங்கத்தில் நாளையோடு பரப்புரையை முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பரப்புரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. மோதலில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டபோது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
கொல்கத்தா விவேகனந்தா கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையில் இருந்த வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டன. கல்லூரி வளாகத்தில் இருந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி சந்திர வித்யாசகர் சிலை உடைக்கப்பட்டது. வன்முறை ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நாளை இரவு 10 மணியோடு தேர்தல் பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 7ஆம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்து தொகுதிகளிலும் 17ஆம் தேதி இரவோடு பரப்புரைகள் நிறைவடைய இருந்தன. ஆனால் மேற்கு வங்கத்தில் மட்டும் கலவரம் மற்றும் வன்முறையின் எதிரொலியால் 24 மணிநேரத்திற்கு முன்பே பரப்புரைகள் முடிக்கப்படுகின்றன.
அத்துடன் நாளை இரவு 10 மணிக்கு பிறகு பொதுக்கூட்டங்கள், டிவி பேட்டிகள், பிரச்சார விளம்பரங்கள் என அனைத்தையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மதுபானக்கடைகளும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது. தேர்தல் நல்ல முறையில் நடத்தவும், வன்முறையை கட்டுப்படுத்தவும், ஜனநாயகத்தை காக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.