மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்கள் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த 11ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள சென்ற மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இதனால் கோபமடைந்த உத்தவ் தாக்கரே, “மோடி, அமித்ஷா, ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பாட்னாவிஸ் உள்ளிட்டோரின் ஹெலிகாப்டரில் இது போன்று சோதனை நடத்த முடியுமா?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், இன்று மகாராஷ்டிராவின் ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று இருந்த போது அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன் காட்சிகளை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அமித்ஷா, “நேர்மையான ஆரோக்கியமான தேர்தல் முறையை பாஜக எப்போதும் நம்புகிறது. தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் பாஜக பின்பற்றும்” எனவும் கருத்து பதிவிட்டுள்ளார்.
மேலும், ஆரோக்கியமான தேர்தல் நடைபெறுவதில் நம்முடைய பங்களிப்பு வேண்டும் எனவும் உலகின் வலிமையான ஜனநாயக நாடாக இந்தியா உள்ளதற்கு நம்முடைய கடமைகளை செய்ய வேண்டும் எனவும் அமித்ஷா எக்ஸ் வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், பிரதமர் மோடி பீகார் மாநிலம் சென்று அங்கு பழங்குடியினருக்கு ரூ. 640 கோடி மதிப்பில், பழங்குடியினருக்கு உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு அடிக்கல் நாட்டினார். பகவான் பிரசா முண்டா என அழைக்கப்படும் பழங்குடியின தலைவரின் 150 ஆவது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின் அங்கிருந்து புறப்பட்டு தியோகர் சென்றார். தியோகரில் அவர் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து அவர் டெல்லி திரும்ப வேண்டிய சூழலில்தான், அவரது விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது. பிரதமர் டெல்லி வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை பிரதமர் அலுவலக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி தனது பரப்புரையை முடித்துக்கொண்டு அவர் புறப்பட்ட போது ஏன் ஒரு மணி நேரம் தாமதப்பட்டது என காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அவரது விமானம் புறப்பட ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் ஏர் ட்ராஃபிக் அதிகாரிகள் அனுமதி வழங்காததே. இது அரசியல் காழ்ப்புணர்ச்சி எனவும் பாஜக மீது மறைமுகமாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதன்பின்னர், ‘பிரதமரின் விமானமே தாமதப்பட்டுள்ளது; இதற்கு தொழில்நுட்ப பிரச்னைதான் காரணம்’ என எதிர்தரப்பு பதிலடி கொடுத்துள்ளது.