மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி, கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி,
- மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும்,
- மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும்,
- தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும்,
- ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதியும்,
- சத்தீஸ்கரில் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நவ. 7 மற்றும் 17 தேதிகளிலும்
தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சத்தீஸ்கரில் முதல்கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும் இரண்டாவது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் சட்டப்பேரவை தேர்தல் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று (அக். 11) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், ’ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதிக்குப் பதிலாக, 25ஆம் தேதி நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23-ல் பெருமளவிலான திருமண மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெற இருப்பதால், பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் இந்த தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மனுத்தாக்கல் ஆரம்பம்: அக்டோபர் 30
மனுதாக்கல் முடிவு: நவம்பர் 6
வேட்புமனு பரிசீலனை: நவம்பர் 7
வேட்புமனு திரும்பப் பெறுதல்: நவம்பர் 9
வாக்குப்பதிவு: நவம்பர் 25
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைய இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 சாதனைகளைப் படைத்த பாகிஸ்தான்!