சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளோடு சேர்த்து தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கு, தமிழகத்தின் வானிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் இது குறித்து தெரிவித்த போது “உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால், தேர்தல் நடத்த வேண்டிய கடமை ஆணையத்துக்கு உள்ளது ; தேர்தல் நடத்தும் சூழல் குறித்து விரைவில் ஆய்வு செய்யப்பட உள்ளது. 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், இப்போதைக்கு அறிவிப்பு வெளியிட வாய்ப்பிலை. ஆனால் டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டு , ஜனவரியில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றனர்
தேர்தல் குறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் “ஒரு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி உள்ளது , இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளதால், 6 மாதத்துக்குள் நடத்த வேண்டும், அதற்கான பணிகளை ஆணையம் மேற்கொள்ளும்” என்றார்.
ஆணையத்தின் ஆலோசனை நடைபெற்று வரும் இந்த சூழலில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளனர். ஒருவேளை தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் பட்சத்தில் ஆணையத்தின் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.