வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது, ஒருவர் ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடுவதைத் தடுப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களை மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பதவியேற்றதும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரைகளை அனுப்பினார். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றன.
அதுகுறித்து அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், மீண்டும் பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது முதல் அனைத்து கட்டங்களிலும் கருத்துக் கணிப்பு முடிவுகளை நடத்துவதற்கும் வெளியிடுவதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.