குற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்குக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் தடைக்காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்துள்ளது
தற்போது சிக்கிம் முதல்வராக பதவி வகித்து வரும் பிரேம் சிங் தமாங், 1990களில் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் பசுக்கள் விநியோக திட்டமொன்றில் ஊழல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக 2003ம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பிரேம் சிங்குக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து 2017ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர் 2018 ஆகஸ்ட் வரை சிறையில் இருந்தார்.
குற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வர் பிரேம் சிங்குக்கு 6 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. அதன்படி 2024ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாது என கூறப்பட்டது.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் பிரேம் சிங் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரது கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏக்கள் பிரேம் சிங்கை முதலமைச்சராக பதவியேற்க அனுமதிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரினர். தேர்தல் ஆணையம் கொடுத்த அனுமதியின்படி பிரேம் சிங் முதல்வராக பதவியேற்றார். அதனால் அவர் அடுத்த 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்குள் வந்தார். இது தொடர்பாக தான் தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் தனக்கு விதிக்கப்பட்ட தடைக்காலத்தை குறைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் பிரேம் சிங் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி சட்டத்தின் வழிப்படி அவருக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகால தடையை 13 மாதங்களாக தேர்தல் ஆணையம் குறைத்தது. எனவே அவரது தடைக்காலம் கடந்த 10 தேதியுடனே முடிவடைந்துவிட்டது. எனவே தேர்தலில் போட்டியிட தடை நீங்கியுள்ளதால் விரைவில் ஏதேனும் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் பிரேம் சிங் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது