மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி நான்காம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளை, மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன.
இந்நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட்டைய தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு எதுவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மத்திய அரசு செய்த சாதனைகள் குறித்த தகவல்களும் நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் இடம்பெறக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.